சென்னை: தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஜனவரி 3-ம் தேதி அரசு ஊழியர் சங்கங்களின் போராட்டத்தின் போது, தமிழக அரசு அறிவித்த புதிய அறிவிப்புகளில் சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், 71 ஆயிரம் சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், பணிக்கொடைத் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். குடும்ப ஓய்வூதியம் மாதம் ரூ.6,750 வழங்கப்படும் என்ற முதல்வர் ஸ்டாலினின் வாக்குறுதிகள் 5 ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றப்படவில்லை.
தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை முதல்வர் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் பள்ளி மாணவர்கள் மதிய உணவு கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதால், தமிழக அரசு இதில் உடனடி கவனம் செலுத்த வேண்டும்.