விழுப்புரம்: “திருப்பரங்குன்றத்தில் சம்பவத்தில், மதத்தை வைத்து அரசியல் செய்து தமிழகத்தில் நுழைந்து விட பாஜக முயற்சி செய்கிறது” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சிந்தாமணியில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சிலை திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. மு.கருணாநிதியின் சிலையை திறந்துவைத்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியது: “தமிழகம் முற்போக்கு மாநிலமாக திகழ்கிறது. திருப்பரங்குன்ற சம்பவத்தில், மதத்தை வைத்து அரசியல் செய்து தமிழகத்தில் நுழைந்து விட பாஜக முயற்சி செய்கிறது. திமுகவின் கடைசி தொண்டர் இருக்கும் வரை, தமிழகத்தில் பாஜகவை நாம் அனுமதிக்க மாட்டோம். தமிழக மக்களும் அனுமதிக்க மாட்டார்கள்.
தமிழகத்தில் காலை உணவு திட்டம், புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை போன்ற எண்ணற்ற திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக 1.15 கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000, முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார். விடுபட்ட மகளிர் உரிமைத் தொகை வரும் 12-ம் தேதி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழகமும், நம்பர் ஒன் முதல்வராக மு.க.ஸ்டாலினும் திகழ்ந்து கொண்டிருக்கிறார். முதல்வருக்கு அடுத்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு கொடுப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர். இந்த வெற்றி வாய்ப்பை திமுகவினர் உறுதி செய்ய வேண்டும்.
அடுத்த 3 மாதங்களில் தேர்தல் வர உள்ளது. தமிழகத்தை பாஜகவுக்கு 10 ஆண்டு ஆட்சியில் அதிமுக வாடகைக்கு விட்டிருந்தது.
இந்த தேர்தலில் அதிமுகவை தமிழகத்தில் அனுமதித்து விட்டீர்கள் என்றால், பாஜகவுக்கு தமிழகத்தை அதிமுக விற்றுவிடும். பாஜக அடிமையாக அதிமுக உள்ளது. பாஜக கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்துவதில் அதிமுக தீவிரம் காட்டுகிறது.
அமித் ஷாவின் அடிமைகளாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் மாறிவிட்டனர். இதற்கு சரியான பதில் தரும் தேர்தல்தான் வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தல். திமுக ஆட்சியின் சாதனைகள், திட்டங்கள், கொள்கைகளை கொண்டு மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும்” என்றார் உதயநிதி ஸ்டாலின்.