தெலங்கானாவைச் சேர்ந்த சுதாகர் ரெட்டி, தற்போது தமிழ்நாடு - கர்நாடகா பாஜக தேசிய இணைப் பொறுப்பாளராக உள்ளார். சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, எஸ்ஐஆர் பணிகளில் பாஜக-வினருக்கு ஆலோசனைகளை வழங்கி உற்சாகமளித்து வரும் அவரிடம், ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காகப் பேசினோம்.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு கொண்டு செல்லும் அளவுக்கு முக்கியமானதா?
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு எதிராக திமுக உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்பி-க்கள் நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானத்தை கொண்டு வருகின்றனர். இதுதான் அவர்கள் ஜனநாயகத்தைக் காக்கும் லட்சணமா? உதயநிதி ஸ்டாலின், “சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியாவைப் போல் ஒழித்துக் கட்ட வேண்டும்” என்றார். இந்துக்கள் மனம் புண்படும் படி உதயநிதி பேசிய போது இவர்களெல்லாம் எங்கே போனார்கள்?
இந்துக்களின் வாக்குகளுக்காகத்தான் திருப்பரங்குன்றம் விவகாரத்தை பாஜக பெரிதாக்குகிறதோ?
திமுக தான் சிறுபான்மையினர் வாக்கு வங்கிக்காக வேண்டுமென்றே இந்தப் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கி உள்ளது. அவர்கள் தான் அரசியலுக்காக இந்துக்களின் மத வழிபாட்டில் குறுக்கிடுகிறார்கள். யாருடைய மத வழிபாட்டிலும் குறுக்கிட யாருக்கும் உரிமை இல்லை. பாஜக-வை பொறுத்தவரை அனைத்து மதங்களையும் சமமாகத் தான் பார்க்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை, ஆளுநர்களை வைத்து பாஜக மிரட்டுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?
பாஜக ஒருபோதும் ஆளுநர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதில்லை. ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுவதால் இதுபோல் திமுக-வினர் தான் புலம்புகிறார்கள். திமுக ஏதாவது தவறு செய்து மாட்டிக்கொண்டால், ஆளுநர், மத்திய அரசு மீது பழிபோட்டு, சம்பந்தமில்லாத ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து, அவர்களின் தவறுகளை திசை திருப்பிவிடுகிறார்கள். காலங்காலமாகவே திமுக-வின் வழக்கம் இதுதான்.
தமிழகத்தில் பாஜக தனித்து நின்று ஒரு எம்எல்ஏ சீட் கூட பெற முடியாது என்கின்றனவே திமுக கூட்டணிக் கட்சிகள்..?
தொடக்கத்தில் பாஜக-வுக்கு 2 எம்பி-க்கள் மட்டும் தான் இருந்தனர். இப்போது 200-க்கும் மேற்பட்ட எம்பி-க்கள் இருக்கிறார்கள். 22 மாநிலங்களில் பாஜக ஆதிக்கம் செலுத்துகிறது. மாநிலக் கட்சிகள் வலுவாக இருக்கும் ஒரு சில மாநிலங்களில் பாஜக காலூன்ற சற்று தாமதம் ஏற்படலாம். தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது, அந்த கட்டத்தை தாண்டிவிட்டோம். பாஜக-வின் வளர்ச்சி இங்கு அபரிமிதமாக இருக்கிறது.
கூட்டணி வைத்தால் தான் தமிழகத்தில் நிலைக்க முடியும் என பாஜக நினைக்கிறதோ?
மக்கள் விரோத ஆட்சி நடத்தி வரும் திமுக-வை வீழ்த்துவதற்கு பலம் சேர்ப்பதற்காகத் தான் கூட்டணி. பாஜக-வை பொறுத்தவரை தமிழகத்தில் பாஜக எப்போதோ காலூன்றி விட்டது. இந்த முறை தமிழகத்தில் பலமான கூட்டணியுடன் களம் இறங்கப் போகிறோம். எங்கள் கூட்டணி நிச்சயம் திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதும்.
இந்த முறை எத்தனை இடங்களில் பாஜக போட்டியிடும்?
தமிழகத்தில் பாஜக அதிகமான தொகுதிகளில் போட்டியிடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கடந்த தேர்தலை விட அதிக தொகுதிகளில் வெற்றியும் பெற்று, பாஜக-வில் இருந்து அதிகமான எம்எல்ஏ-க்கள் சட்டப்பேரவைக்குள் நுழைவார்கள்.
அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என பழனிசாமி பொதுக்குழுவில் பேசியிருக்கிறாரே... அப்படியென்றால் அமித் ஷாவின் கூட்டணி ஆட்சி பிரகடனம்..?
தோல்வி பயத்தால் அதிமுக - பாஜக கூட்டணிக்குள் பிளவை ஏற்படுத்த திமுக சதி திட்டம் தீட்டுகிறது. அதில் ஒன்று தான், அதிமுக - பாஜக-வினர் கருத்துகளை திரித்துப் பரப்புவது. அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. அதிமுக - பாஜக கூட்டணியை எந்த சக்தியாலும் பிரிக்கமுடியாது.
அண்ணாமலை முன்புபோல் வேகமாக இல்லையே... மேலிடம் அவரை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறதா?
அண்ணாமலை அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை செய்துகொண்டிருக்கிறார். பாஜக-வில் எல்லோரும் ஒன்று தான். நயினார் நாகேந்திரனும் ஒன்றுதான். அண்ணாமலையும் ஒன்றுதான். தலைவர்களும் ஒன்றுதான். தொண்டர்களும் ஒன்று தான். திமுக-வைப்போல பாஜக குடும்பக் கட்சி அல்ல. குடும்பத்தினர் மட்டுமே ஆட்சி அதிகாரத்தில் இருப்பதற்கு.
பாஜக-வுக்கான தனி தேர்தல் அறிக்கை ஏதும் வெளியிடும் திட்டம் இருக்கிறதா?
அதிமுக - பாஜக கூட்டணிக்கு ஒரே தேர்தல் அறிக்கையாகத்தான் வெளியிட இருக்கிறோம். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.