பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
கோவை: ‘ரூ.25 ஆயிரம் கோடி மதிப்புள்ள கோயிலுக்கு சொந்தமான 3,085 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்துள்ளனர்’ என தவெக அரசு மீது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம், பீளமேட்டில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் இன்று (ஜூலை 10) நடைபெற்றது.
இதில், மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கலந்துரையாடினார். அதைத் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது:
“இன்று மிகப்பெரிய மோசடி வேலையை தமிழக அரசு அரங்கேற்றியுள்ளது. கரூரில் அறநிலையத் துறைக்கு சொந்தமான ரூ.25 ஆயிரம் கோடி மதிப்புள்ள 4 கோயில்களின் 3,085 ஏக்கர் நிலம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியராலும், இணை ஆணையராலும் பரிந்துரைக்கப்பட்டு, இன்றைக்கே பட்டா போட்டு கொடுத்துள்ளனர். முதல்வர் விஜய் இந்து கோயில்களின் நிலத்தை அழிக்க வேண்டும் என்பதற்காக இதை செய்து இருக்கின்றாரா?
பாஜக சார்பில் இதை வன்மையாக கண்டிக்கிறோம். இதை எடுத்து தனியாருக்கு கொடுக்க அவர்களுக்கு என்ன தகுதி உள்ளது? இது தொடர்பான அரசாணை வந்துள்ளது. முழு விவரம் இன்னும் தெரியவில்லை. முழு விவரமும் தெரிந்து கொண்டு, இது குறித்து விரிவாக பிறகு கூறுகிறேன். இந்த விவகாரத்தை முழுமையாக ஆய்வு செய்த பின், இந்து அறநிலையத்துறை இடங்களை மீட்க பா.ஜ.க நிச்சயமாக போராடும்.
கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு அரசு வேலைக்கான ஆணை வழங்கியிருக்கின்றனர். சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர். மின்சாரத் துறை, போக்குவரத்துத் துறை, வருவாய்த் துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட துறைகளில் பணியின் போது உயிரிழந்த ஆயிரக்கணக்கானோருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டிய சூழல் உள்ளது.
குரூப் 1 உட்பட பல்வேறு தேர்வுகளில் தேர்வு எழுதியவர்களுக்கு வேலைவாய்ப்பு முன்னுரிமை கொடுக்காமல் உள்ளனர். தற்போது வேலை கொடுத்ததை பற்றி நான் தவறாக கூறவில்லை. ஆனால், சீனியாரிட்டி அடிப்படையில் அவர்களுக்கு கொடுத்து இருந்தால் நன்றாக இருக்கும். கூட்டத்துக்கு வந்து உயிரிழந்தவர்களுக்கு கொடுத்தால், அதில் ஒரு சுயநலம் இருக்கிறது.
பணம் கொடுப்பது மட்டும் லஞ்சம் இல்லை. தனக்கு வேண்டியவர்களுக்கு செய்யும் உதவி கூட லஞ்சம் தான். அதனடிப்படையி்ல், இவரது கூட்டத்துக்கு வந்து உயிரிழந்தவர்களுக்கு மட்டும் வேலையை வழங்கியிருப்பதும் ஒரு லஞ்சம் தான்.
ஒரே நாளில் 3,085 ஏக்கர் நிலத்தை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? அதுவும் ஒரு வகை லஞ்சம் தான்.
கரூரில் முதல்வர் பேசியதை அரசு பள்ளியில் ஒளிபரப்பு செய்த சம்பவம் இதுவரை நடந்தது இல்லை. இதுபோன்று சினிமாவில் தான் பார்த்திருப்போம். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் முதல்வராக வந்த பிறகு, தான் கூறியதை செய்து காட்டியுள்ளார். தற்போது முதல்வராக வந்துள்ள ஜோசப் விஜய் ஒரு சமுதாயத்துக்கு சொந்தமான சொத்தையே எடுத்துக் கொடுத்தார் என்றால் அது தவறு.
முதல்வர் விஜய் வரும்போது பள்ளிக்கு விடுமுறை விடுவது, இவரது காட்சிகளை பள்ளியில் ஒளிபரப்புவது போன்றவை தவறான விஷயம். மாணவர்களை தவறான வழியில் எடுத்துச் செல்வதற்காக உள்ள விஷயம். இவையெல்லாம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு உரங்களை வாங்கி மானிய விலையில் விவசாயிகளின் நன்மைக்காக கொடுக்கிறது. சிலர் இதை இங்கு திரவ வடிவில் மாற்றி கேரளாவுக்கு அனுப்புவதாக சொல்கின்றனர். இதை முழுமையாக பார்த்துவிட்டு சொல்கின்றேன்.
அயோத்தி கோவில் விவகாரம் குறித்து கேட்கிறீர்கள். தவறு எங்கு நடந்தாலும் அது கண்டிக்க வேண்டியது தான். அயோத்தி ராமர் கோயில் விவகாரம் குறித்து இறுதி அறிக்கை வந்தவுடன் பேசுகிறேன்.
விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, தன்னுடைய நிலைப்பாட்டுகளை மாற்றிக் கொண்டே இருக்கிறார். அவர் என்ன எண்ணத்தில் இருக்கிறார் என்பதை தெரியவில்லை. ஆனால், 2029 தேர்தலில் ஒரே எதிரிக்கட்சியாக எல்லோரும் சேர்ந்து பாஜகவை பார்க்கின்றனர். பாஜகவை பார்த்து அனைவரும் பயப்படுகின்றனர்” என்று அவர் கூறினார்.