புதுச்சேரியில் பாஜக ஊடக மையத்தை மத்திய அமைச்சர்
மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார். உடன் மாநிலத் தலைவர் வி.பி.ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம்.
புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஏப்.3-ம் தேதி வருகை தருகிறார். புதுச்சேரி பாஜக சார்பில் தேர்தல் ஊடக மையம் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சரும் பாஜக தேர்தல் பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியா ஊடக மையத்தை திறந்து வைத்தார். கட்சியின் மாநிலத் தலைவர் வி.பி.ராமலிங்கம், பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் வி.பி.ராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிறப்பான கூட்டணியை ஏற்படுத்தி எந்தவித இடையூறும் இன்றி தேர்தலில் களம் காண தயாராகி விட்டோம்.
எதிரணியில் உள்ள காங்கிரஸ் - திமுக ஒருவொருக்கொருவர் நம்பிக்கையற்று, இப்போதே யார் முதல்வர், அமைச்சர் என பேசி வருகின்றனர்.
புதுச்சேரி நலன் ஒன்றை மட்டும் கருதி பாஜக தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து, என்டிஏ அரசை மீண்டும் கொண்டு வந்து மக்களுக்கு நலத்திட்டங்களை கொடுப்பது தான் கடமை என்று பணியாற்றி வருகிறது.
வரும் 27 முதல் 29 வரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய தலைவர் நிதின் நபின், முன்னாள் தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் பிரச்சாரத்துக்கு வருகின்றனர்.
அதேபோல் ஏப். 3-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இங்கு நடைபெறும் ‘ரோடு ஷோ’-வில் பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.