தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்

 
தமிழகம்

“மாணவர்கள் மத்தியில் பொய் தகவல்களை பரப்புவதா?” - ராகுல் காந்திக்கு பாஜக கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழக மாணவ சமுதாயத்தின் வலிமையை சீர்குலைக்கும் வகையில் செயல்படக் கூடாது என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நீலகிரியில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டு, மாணவர்கள் மத்தியில் உரையாடிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் அரசியலுக்காக மாணவச் செல்வங்களிடம் விஷ விதைகளை தூவி உள்ளார்.

மத்திய மோடி அரசால் ஜனநாயகன் படத்துக்கு ஆபத்து, மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும், கல்வி தனியார்மயம் ஆகக்கூடாது, மாணவர்கள் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என ராகுல் காந்தி, சிறுபான்மை நிறுவனம் நடத்தும் பள்ளியில் பல்வேறு பொய்யான தகவல்களை பரப்பி, தமிழக சட்டமன்றத் தேர்தல் பயத்தில், வாக்கு வங்கி அரசியலுக்காக அவதூறு செய்திகளை பரப்பியுள்ளார்.

மத்திய அரசால் ஜனநாயகன் படத்துக்கு ஆபத்து என்கிற தவறான செய்தியை மாணவர்களுக்கு சொல்லி உள்ள ராகுல், இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் காங்கிரஸ் செய்த ஜனநாயக படுகொலை குறித்தும், எமர்ஜென்சி அடக்குமுறையால் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட அரசியல் படுகொலைகள், சட்டவிரோத கைதுகள் குறித்த உண்மை வரலாற்றை மாணவர்களுக்கு சொல்லித் தந்திருக்க வேண்டும்.

அன்பு காட்டும் இந்தியாவை உருவாக்குவேன் என்று பள்ளியில் பொய் சொன்ன ராகுல், கண்ணியமிகு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக தான் பொறுப்பேற்ற பிறகும், நாடாளுமன்ற கூட்டங்களிலும், வெளிநாடுகளிலும், வாக்கு வங்கிக்காக தேர்தல் பிரச்சாரத்தின் போதும், மனித நேயம், அன்பு ஒற்றுமை எனும் நல்லெண்ணங்களுக்கு எதிராக, பிரிவினைவாத, வகுப்புவாத, மதவாத கருத்துக்களை தொடர்ந்து பேசி வருவது ஏன்?

இளம் மாணவர்களை அறிவார்ந்த குடிமக்களாக மாற்றுவதே பள்ளிகளின் கடமை. நாம் எல்லோருமே ஞானத்தோடு செயல்பட வேண்டும். ஞானம் இல்லாமல் நாம் செயல்பட்டால் இந்த உலகமே மகிழ்ச்சியற்ற இடமாக மாறும். ஞானம் இல்லாமல் இருப்பதால் தான் நாம் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறோம். இதுபோன்ற பள்ளிகள்தான் மாணவர்களை ஞானமுள்ள மனிதர்களாக மாற்றுகிறது என்று குறிப்பாக சிறுபான்மை பள்ளிகளை குறிப்பிட்டு ஊருக்கு உபதேசம் செய்த ராகுல் காந்தி, ஞானம் இல்லாமல் மாணவர்களை கடும் குளிரில் கொட்டும் மழையில் நிற்க வைத்து, கொடுமைப்படுத்தி, மகிழ்ச்சியற்ற சூழ்நிலையை உருவாக்கிய அந்தப் பள்ளிக்கு ஏன் தன்னுடைய கண்டனத்தை, வருத்தத்தை தெரிவிக்கவில்லை?

தங்களுடைய சுயநல விளம்பர வியாபார கல்விப் பணிக்காக, கொட்டும் மழையில் ராகுல் காந்தி பேச்சைக் கேட்பதற்காக மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொள்ளாமல், நீலகிரி போன்ற குளிர் பிரதேசத்தில் கொட்டும் மழையில் உட்கார வைத்த, பள்ளி நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர், காவல் துறை, தமிழக பள்ளிக்கல்வித்துறை, தேசிய குழந்தைகள் நல ஆணையம் இது குறித்து உரிய விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்து பேசுகையில், “நான் நம்புவது என்னவென்றால், கல்வி மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கக்கூடாது. கல்வி தனியார்மயமாக்கப்பட கூடாது. தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இருக்கலாம். ஆனால், நல்ல தரமான அரசு கல்விக்கான தேவை உள்ளது. அதற்காக, அரசாங்கம் கல்விக்கான பட்ஜெட்டில் பணத்தை ஒதுக்க வேண்டும் என்று தனியார் பள்ளி நிகழ்ச்சியில் முன்னுக்குப் பின் முரணாக நரித்தன அரசியல்வாதியாக, உண்மைகளை மறைத்து பேசலாமா?

60 ஆண்டு கால இந்திய மக்களின் கோரிக்கைகளை, முற்றிலுமாக சேர்த்து வைத்து முடிவுக்கு கொண்டு வந்து, கல்வித்துறையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தி உலக மாணவர்களுக்கு இணையாக இந்திய மாணவர்கள் கல்வி கற்கக்கூடிய சூழ்நிலையை மோடி அரசு உருவாக்கி இருப்பதை ராகுல் காந்தியால் மறைக்க முடியாது.

மனப்பாடம் செய்யும் முறையை ஒழித்து, படைப்பாற்றல் மற்றும் திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் தேசிய கல்விக் கொள்கை, நவீன தொழில்நுட்பம் மற்றும் பசுமை உள்கட்டமைப்புகள் பிஎம் ஸ்ரீ பள்ளிகள், குழந்தைகளும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணியல் திறனை உறுதி செய்யும் நிபுண் பாரத், கிராமப்புற மாணவர்களும் சிறந்த பேராசிரியர்களின் வகுப்புகளைப் பெரும்வகையில், உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக ஆன்லைன் வழியாக இலவசமாகப் பாடங்களை வழங்கும் "ஸ்வயம்" கல்வி தளம் திட்டம் மற்றும் தரமான கல்வியை அனைவருக்குமாகக் கொண்டு சேர்க்கும் சமக்ர சிக்க்ஷா ஒருங்கிணைந்த திட்டம், இந்திய கல்வித்துறையில், ஏழை மாணவர்களின் வாழ்க்கையில் ஒளி விளக்கை ஏற்றிய நீட் தகுதி தேர்வு என அத்தனை சிறப்பு திட்டங்களில் மத்திய மோடி அரசு தந்துள்ளது.

பெண்கள் இன்னும் பல துறைகளில் பங்களிப்பை வழங்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மகளிரை சமூகத்தின் முக்கிய நீரோட்டத்தில் இணைப்பதற்கு பொருளாதார அதிகாரமளித்தலும், பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வதும் மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து அனைத்து துறைகளிலும் உயர்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்திய ஜனாதிபதியாக திரவுபதி முர்மு, நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் போன்றோர் உலகின் சக்தி வாய்ந்த பெண்மணிகளாக சிறப்பாக செயல்பட்டு வருவதை ஏன் ராகுல் காந்தி மாணவர்களிடம் குறிப்பிடவில்லை?

தமிழகத்துக்கு வந்த ராகுல் காந்திக்கு, காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை மாணவர்களோடு பராசக்தி திரைப்படத்தை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தால், இந்திய காங்கிரஸ் வரலாற்றில், இந்திரா காந்தி ஆட்சியில் நடந்த சீர்கேடுகள், அடக்குமுறைகள், அத்துமீறல்கள், அரசியல் படுகொலைகளை கண்டுகொண்டு, பொய்களை கூறிய ராகுல் காந்திக்கு அரசியல் பாடம் எடுத்து மாணவர்களே விரட்டி அடித்து இருப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT