வேலூர் இப்ராஹிம்

 

படம்: நா.தங்கரத்தினம்.

தமிழகம்

“முஸ்லிம்களுக்கான 3.5% உள் ஒதுக்கீட்டை ரத்து செய்க” - பாஜக நிர்வாகி வேலுர் இப்ராஹிம்

கி.மகாராஜன்

மதுரை: “தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கான 3.5 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத உள்ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் இன்று மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறிய: “தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் இஸ்லாமியர்களின் வாக்கு வங்கிக்காக முஸ்லிம்களில் குறிப்பிட்ட 7 பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு 3.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இது தொடர்பாக 2024-ல் அப்போதைய திமுக அரசு பிறப்பித்த அரசாணையை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்துள்ளது. வேறு மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்துக்கு வருபவர்கள் பிசி - முஸ்லிம் சலுகையை பெற முடியாது என உயர் நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது.

இஸ்லாம் மதத்தில் நம்பிக்கை அடிப்படையில் உயர்வு, தாழ்வோ, சாதியோ இல்லை. பிறப்பின் அடிப்படையில் சாதி தேவையில்லை என்றே இஸ்லாம் மதத்துக்கு வருகின்றனர். இங்கு வந்தும் சாதி உள்ளது, அதே சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு பெற வேண்டும் என்பது இஸ்லாம் நம்பிக்கைக்கு எதிரானது. அவர்கள் முஸ்லிம் என்று சொல்லும் தகுதியை இழந்துவிடுகின்றனர். எனவே தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத உள் ஒதுக்கீட்டை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

தீர்ப்பு அளித்த நீதிபதிகளின் சாதி மற்றும் தனிப்பட்ட அடையாளங்களை குறிப்பிட்டு இஸ்லாமிய அமைப்புகள் அவதூறு பிரச்சாரம் செய்து வருகின்றன. ஏற்கெனவே இஸ்லாமியர்களை மத்திய அரசுக்கும், பாஜகவுக்கும் எதிராக திசை திருப்பி வரும் நிலையில், இந்த நீதிமன்ற தீர்ப்பை வைத்து ஒரு பதற்றத்தை உருவாக்கி வருகின்றனர்.

திமுக அரசு 2024-ல் பிறப்பித்த 3.5 சதவீத உள்ஒதுக்கீடு அரசாணை மதமாற்றத்தை ஊக்குவிப்பது போல் உள்ளது. ஏக இறைவனின் கொள்கை, வணக்க வழிபாட்டு முறை, சாதி இல்லை, ஏற்றத்தாழ்வு இல்லாத சமூக நீதி உள்ளது என்ற அடிப்படையில் இஸ்லாம் மதத்துக்கு வருபவர்களை வரவேற்கலாம். இடஒதுக்கீடு கிடைக்கும் என நினைத்து மதம் மாறுவதை வரவேற்க முடியாது. அதன் அடிப்படையிலான அரசாணையை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இந்த உண்மை தெரியாமல் இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டை நீதிமன்றம் பறித்துவிட்டது, மத்திய பாஜக அரசு பறிக்க தூண்டிவிட்டது என பிரச்சாரம் செய்கின்றனர்.

இஸ்லாமியர்களுக்கு மதத்தின் அடிப்படையில் ஒரு காலமும் இடஒதுக்கீடு தர முடியாது. அரசியலமைப்பு சட்டத்தில் அந்தச் சலுகை வழங்கப்படவில்லை. பிசி அடிப்படையில் அனைத்து சலுகைகளும் கிடைக்கும். இஸ்லாமியர்களுக்கு எதாவது செய்வதாக இருந்தால் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்புக்கான சரியான திட்டங்களையும், கடன் பெறுவதில் முன்னுரிமையும் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்.

அதைச் செய்யாமல் வாக்கு வங்கிக்காக, மதமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், யார் வேண்டுமானாலும் இஸ்லாம் மதத்துக்கு வந்தால் 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது சட்ட விரோதம். நீதிமன்றம் சரியான தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை இஸ்லாமியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாமியர்களை தவறாக வழிநடத்துகிறார்கள். நீதிமன்றம், நீதிபதிகளுக்கு எதிராக பேச வைக்கின்றனர். இஸ்லாமியர்களுக்கு உள்ஒதுக்கீடே தேவை இல்லை என்று சொல்லும்போது இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக மாற்ற வேண்டும் என சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கூறியிருப்பது முரண்பாடானது. வாக்கு வங்கிக்காக இஸ்லாமியர்களை திசை திருப்ப வேண்டாம் என சிறுபான்மைத் துறை அமைச்சரை கேட்டுக்கொள்கிறோம்.

உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செல்வதாக சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கூறியிருப்பது வருத்தமானது. அவருக்கு இஸ்லாமிய சட்டங்கள் குறித்து புரிதல் இல்லை. மேல்முறையீடு செய்தாலும் சட்டப்படி நிற்காது. மேல்முறையீடு என்ற பெயரில் இஸ்லாமியர்களை ஏமாற்ற தவெக அரசு முயல்கிறது.

திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை இஸ்லாமியர்கள் தடுக்கவில்லை. வக்ஃபு வாரியம் தான் தடுத்தது. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது 2000 ஆண்டு பழமையானது. வக்ஃபு வாரியம் 100 ஆண்டுக்கு முந்தையது. 2000 ஆண்டுக்கு முந்தைய இந்துக்களின் பண்பாட்டை, கலாச்சாரத்தை நூறு ஆண்டுக்கு முன்பு தெடாங்கப்பட்ட வக்பு வாரியம் அழிக்க முயல்வது எப்படி சரியாகும்?

திமுக அரசைப் போல் தவெக அரசும் இந்துக்களின் புனித உணர்வுகளை துண்டாட முயல்கிறது. தீபம் ஏற்றுவது அனைத்து மதத்திலும் நடைமுறையில் உள்ள வழக்கமான வழிபாடு. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக போல் தவெகவும் அரசியல் செய்கிறது. திமுக அரசின் பினாமி அரசாக தவெக அரசு செயல்படக்கூடாது. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற போராடுவோம்” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT