தமிழகம்

“விஜய்யை எதிர்கொள்ள இளைஞர்களுக்கு கூடுதல் வாய்ப்பு!” - பாஜக இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா கோரிக்கை | நேர்காணல்

துரை விஜயராஜ்

2026 சட்டப்பேரவை தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என பாஜக இளைஞரணி மாநில தலைவர் எஸ்.ஜி.சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக அவரிடம் பேசியதிலிருந்து...

உதயநிதிக்குப் போட்டியாக இளம் தலைவராக பாஜக உங்களை முன்னிறுத்துவது பற்றி..?

திமுக-வில் ஸ்டாலின், உதயநிதி என இளைஞர் அணி செயலாளர் பதவி குடும்பச் சொத்தாகவே இருக்கிறது. ஆனால், தமிழக பாஜக-வில் 14-வது தலைவராக நான் பொறுப்பேற்றுள்ளேன். அதிகபட்சம் 3 ஆண்டுகள் மட்டுமே என்னால் இந்தப் பதவியில் இருக்க முடியும். 60 ஆண்டுகள் வரை பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க இது திமுக அல்ல.

உதயநிதி, விஜய், சீமான் ஆகியோருக்கு எதிராக பாஜக இளைஞர் அணி எத்தகைய சவால்களை முன்வைக்கப்போகிறது?

இன்று தமிழகத்தில் ஐபோன் உற்பத்தி நடக்கிறது என்றால், அதற்குப் பிரதமர் மோடியின் தொலைநோக்கான பிஎல்ஐ திட்டமே காரணம். இதன் மூலம் தமிழகத்தில் 7 லட்சம் இளைஞர்களுக்கு வாழ்வாதாரம் கிடைத்துள்ளது. முத்ரா கடன் திட்டம் ஆயிரக்கணக்கான இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்றியுள்ளது. நாங்கள் முன்வைப்பது வெற்று அரசியலல்ல; வளர்ச்சி அரசியல். இதுதான் அவர்களுக்கு சவாலாக அமையும்.

திராவிடத்தையும் தேசியத்தையும் இரு கண்களாகப் பார்ப்பதாக விஜய் கூறுகிறாரே..?

திராவிடத்தையும் தேசியத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கும் எவரையும் மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். திராவிடமும் தேசியமும் இரு துருவங்கள். எனவே, 'திராவிடம் - தேசியம்' என இரண்டையும் கலந்து ஒரு பிரச்சாரத்தை நடிகர் விஜய் மக்களிடம் கொண்டு சென்றால், அது நிச்சயமாக எடுபடாது.

திராவிடக் கட்சியான அதிமுக-வுடன் கூட்டணி வைத்திருக்கும் பாஜக, திராவிட சித்தாந்தத்தை ஏற்கிறதா?

திமுக 'திராவிட மாடல்' என்று கூறும்போது, அதிமுக 'தமிழ்நாடு மாடல்' என்கிறது. அதிமுக, தமிழகத்தை மையப்படுத்திய அரசியலை முன்னெடுத்தாலும், திமுக, திராவிடம் என்கிற பெயரில் மக்களைத் திசைதிருப்புகிறது. இந்த ஏமாற்று வித்தைகளைத் தாண்டி, உண்மையான வளர்ச்சியை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள்.

பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே இளைஞர்களை இழுக்கும் முயற்சியில் இருந்தாலும் இம்முறை விஜய் இளைஞர்களின் வாக்குகளை கணிசமாக ஈர்ப்பார் போலிருக்கிறதே..?

விஜய் ஏற்கெனவே பட்டிதொட்டியெங்கும் அறியப்பட்ட முகம் என்பதால், அவர் தனது சின்னத்தை மட்டும் மக்களிடம் கொண்டு சேர்த்தால் போதுமானது. இது போன்ற திரைக்கவர்ச்சி பின்னணி கொண்ட கட்சிகளின் வருகை, பாஜக போன்ற பேரியக்கங்களுக்கு ஒரு சவாலே. திரைக்கவர்ச்சியோ, ஊடகக் கவர்ச்சியோ இல்லாத கட்சி எங்களுடையது. இவர்களை விட நாங்கள் பன்மடங்கு அதிகமாக உழைத்தால் மட்டுமே மக்களுடனான நெருக்கத்தை ஈடுகட்ட முடியும் என்பதைத் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளோம். எனவே, கவர்ச்சி அரசியலுக்குப் பதிலாக, தீவிரமான களப்பணி மூலமாக ஒவ்வொரு வீட்டையும் சென்றடைவோம்.

தமிழகத்தில் கருத்துரிமை நசுக்கப்படுவதாகக் கருதுகிறீர்களா?

திருத்தணி சம்பவம் போன்ற வன்முறைப் போக்குகளைத் தடுக்கத் தவறிய காவல்துறை, எதிர்க்கட்சியினரையும் பத்திரிகையாளர்களையும் ஒடுக்குவதிலேயே குறியாக இருக்கிறது. வெறும் 41-A நோட்டீஸ் கொடுத்து விசாரிக்க வேண்டிய ஒரு சாதாரண வழக்குக்காக, மதுரையிலிருந்து 100 போலீஸாரை அனுப்பி என்னைக் கைது செய்கிறார்கள். ஆனால், சட்டவிரோத செயல்களை தடுக்க அரசு தவறிவிடுகிறது.

தேர்தலில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்தப் போகிறீர்கள்?

இளைஞர்கள் அதிகம் புழங்கும் சமூக ஊடகத் தளங்களில், ஆளும்கட்சியின் பொய்களை முறியடிப்பதையும், கடந்த 11 ஆண்டுகளில் பிரதமர் மோடி தமிழகத்துக்குத் தந்த நன்மைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதையும் முதன்மைப் பணியாகச் செய்து வருகிறோம். இதற்காக இளைஞர் அணியில் பிரத்யேக சமூக ஊடகப் பிரிவை உருவாக்கி, தமிழகம் முழுவதும் 4 பயிற்சிப் பட்டறைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம்.

பாஜக ஒரு 'வடநாட்டு கட்சி' என்ற பிம்பத்தை உடைக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் என்ன?

தமிழக பாஜக இளைஞரணியில் மட்டும் மொத்தம் 19,800 பொறுப்பாளர்கள் உள்ளனர். இவர்கள் தமிழகத்திலேயே பிறந்து, வளர்ந்து மக்களுக்காகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள். இப்படி முழுக்க முழுக்கத் தமிழர்களால் வழிநடத்தப்படும் ஒரு இயக்கத்தை, அரசியல் லாபத்துக்காக 'வடநாட்டு கட்சி' என்று எப்படி முத்திரை குத்த முடியும்? இந்த உண்மையை நாங்கள் மக்களிடம் கொண்டு செல்வோம்.

தமிழகத்தில் மதுவிலக்கு குறித்து பாஜக தேர்தல் அறிக்கை பேசுமா?

மது விற்பனையை அரசே நடத்துவது தவறு என்பதே பாஜக-வின் தெளிவான பார்வை. தனிநபரின் விருப்பத்தை நாம் கட்டுப்படுத்த முடியாது, ஆனால், அரசே இலக்கு நிர்ணயித்து மக்களைக் குடிக்கத் தூண்டுவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். தமிழகத்தில் தினசரி 96 லட்சம் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பிரம்மாண்டமான விற்பனை அளவே, தமிழக அரசே புதிய குடிகாரர்களை உருவாக்குவதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது.

தேர்தலில் பாஜக இளைஞரணிக்கான கோட்டா எவ்வளவு... குறிப்பாக, நீங்கள் போட்டியிடுவீர்களா?

கடந்த மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியை எதிர்பார்த்தேன். இந்தத் தேர்தலில் வேளச்சேரியில் போட்டியிட விருப்பம் கொண்டுள்ளேன். இருப்பினும், வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது. தமிழக அரசியலில் நிலவும் புதிய சவால்களை, நடிகர் விஜய் போன்றவர்களின் வருகையை எதிர்கொள்ள இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு களை வழங்க வேண்டும். இதை கட்சி கூட்டங்கள்மூலமாகவும் கோரிக்கையாக வைத்திருக்கிறேன்.

SCROLL FOR NEXT