தமிழகம்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்: தவெக அரசுக்கு பாஜக, பாமக, அமமுக கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: ‘தமிழகத்தின் நிதிநிலை ஏற்கெனவே தெரிந்ததுதான். எனவே, தேர்தல் வாக்குறுதிகளை தவெக அரசு நிறைவேற்ற வேண்டும்’ என்று பாஜக, பாமக, அமமுக கட்சிகள் கோரிக்கை விடுத் துள்ளன.

இதுகுறித்து அக்கட்சித் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:

வானளாவ வாக்குறுதிகள்

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்: திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தின் கடன் ரூ13.18 லட்சம் கோடி எனவும், வருவாய் பற்றாக்குறை ரூ.78.324 கோடி என்றும் தவெக வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது. இது தேர்தல் நடப்பதற்கு முன்பே, அனைத்து மக்களுக்கும் தெரியும்.

இவ்வளவு நிதிநிலை நெருக்கடி தெரிந்தும் எப்படி வானளாவ வாக்குறுதிகளை அள்ளிவிட்டீர்கள். தற்போதுள்ள நிதி நெருக்கடியின் காரணமாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது; எங்களை மன்னித்து விடுங்கள் என்று கெஞ்சுவார்கள் போலிருக்கிறது, சாக்குபோக்கு சொல்லாமல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

பாமக தலைவர் அன்புமணி: மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் 35 சதவீதம் வட்டிக்கு செலவிடப்படுவதாக அரசின் வெள்ளை அறிக்கை தெரிவிக்கிறது.

தமிழகத்தில் புதிதாக எந்த வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தாமல், இருக்கும் திட்டங்களை செயல்படுத்தவும், தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவுமே தமிழக அரசு ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்க வேண்டியிருக்கும்.

தேர்தல் வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றப் போகிறது என்பதற்கான செயல்திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும்.

எப்படி சரி செய்வீர்கள்?

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: தமிழக நிதிநிலை குறித்த தவெக அரசின் வெள்ளை அறிக்கையில், நிதிநிலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எப்படி சரி செய்யப் போகிறார்கள்? அதற்கான தெளிவான செயல் திட்டங்கள் என்ன? வருவாயைப் பெருக்க அரசு எத்தகைய புதிய முயற்சிகளை மேற்கொள்ள உள்ளது என்பதற்கான பதில்கள் இல்லை.

மேலும், தேர்தல் வாக்குறுதியை எப்படி நிறைவேற்றப் போகிறீர்கள்? என்பது குறித்து விளக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறி யுள்ளனர்.

SCROLL FOR NEXT