துரை வைகோ | கோப்புப் படம்
கோவில்பட்டி: “அதிமுகவை பலவீனப்படுத்தி, தமிழகத்தில் இரண்டாவது பெரிய சக்தியாக வரவேண்டும் என்பது பாஜகவின் ஆசை” என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி தெரிவித்தார்.
கோவில்பட்டியில் இன்று செய்தியாளர்களிடம் துரை வைகோ கூறும்போது, “தவெகவில் இணைவது என்பது செங்கோட்டையன் எடுத்த முடிவு. அவரின் தனிப்பட்ட விருப்பம். தவெகவில் செங்கோட்டையன் இணைவதால் பலமா, பலவீனமா என்பதை 2026 சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சி பெறும் ஓட்டுகளை பொறுத்தே சொல்ல முடியும். அதிமுகவை பலவீனப்படுத்தி, தமிழகத்தில் இரண்டாவது பெரிய சக்தியாக வரவேண்டும் என்பது பாஜகவின் ஆசை.
சட்டப்பேரவை தேர்தல் சீட், கூட்டணி குறித்து நான் முடிவெடுக்க முடியாது. மதிமுக தலைவர் வைகோ மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருவரும் பேசி முடிவு எடுப்பார்கள். எங்களுடைய சின்னத்தில் நிற்க வேண்டும் என்பது மதிமுக தொண்டர்கள் விருப்பம். இது குறித்து கூட்டணி பேச்சுவார்த்தையின் போது சுமூகமாக பேசி முடிவெடுக்கப்படும்.
தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். அப்படி என்றால், பிற கட்சிகள் ஆட்சி செய்தால் நீங்கள் கொடுக்க மாட்டீர்களா?” என்றார் துரை வைகோ.