பாஜக மாநில துணைத் தலைவர், தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர், சட்டத்துறையில் நீண்ட நெடிய அனுபவமிக்கவர் என பன்முகத்தன்மை கொண்டவர் வழக்கறிஞர் ஆர்.சி. பால்கனகராஜ். அவரிடம் ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக பேசினோம்.
விஜய்யின் ஜனநாயகன் தணிக்கை விவகாரம், கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை என தவெக-வை தன் வழிக்கு கொண்டு வர விஜய்க்கு, பாஜக அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறதே?
ஜனநாயகன் தணிக்கை விவகாரத்தில் விஜய்க்கு யாரோ தவறான ஆலோசனை கொடுத்துள்ளனர். ரிவியூ கமிட்டிக்கு பரிந்துரைத்தால் என்ன?. சரி படத்தை ரிவியூ செய்துவிட்டே சான்றிதழ் கொடுங்கள் எனக் கூறியிருக்கலாமே? அதற்கு போதுமான காலஅவகாசம் இருந்ததே. அப்படி நடந்திருந்தால் இந்நேரம் ஜனநாயகன் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகியிருக்கும். அதைவிடுத்து நீதிமன்றத்தை நாடியது விஜய் செய்த தவறு.
அடுத்து, கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் எனக்கோரியதே தவெக-தானே. கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை எல்லா தரப்பிலும் விசாரிக்க சிபிஐக்கு முழு அதிகாரம் உள்ளது. விஜய் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகளிடம் சிபிஐ முதற்கட்டமாக விசாரித்துள்ளது. நாளைக்கே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடமும் கூட இதுதொடர்பாக விசாரிக்கலாம். அதற்காக விஜய்க்கு பாஜக அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுப்பதாகக்கூறி மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடக்கூடாது. என்னைப்பொருத்தமட்டில் இந்த 2 விஷயங்களிலும் விஜய் தனக்குத்தானே சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொண்டார்.
ஒன்று எங்க கூட்டணிக்கு வா... இல்லையா திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளை தனியாக பிரித்துக்கொண்டு போ... என விஜய்க்கு பாஜக மறைமுகமாக அசைன்மெண்ட் கொடுத்துள்ளதாக திமுக குற்றம் சாட்டுகிறதே?
இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. தமிழகத்தில் என்டிஏ கூட்டணி முன்னாள் முதல்வர் பழனிசாமி தலைமையில் வலுவாக உள்ளதால் எங்களைப் பார்த்து திமுக பதற்றத்தில் உள்ளது. அதனால் தான் இதுபோல வதந்தி பரப்புகிறது.
அரசியல் பழிவாங்கல் எண்ணத்துடன் பாஜக அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருவதாக திமுக சார்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையா?
மத்திய அரசு போதுமான நிதி தர மறுப்பதாக தவறான குற்றச்சாட்டை திமுக மக்கள் மத்தியில் பரப்பி வருகிறது. மத்திய அரசு நிதி கொடுக்காமலா தமிழக அரசு பல்வேறு திட்டங்களை கோடிக்கணக்கில் செயல்படுத்தி வருகிறது. இதுவரை எத்தனை ஆயிரம் கோடி நிதி தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் தான் பட்டியல் போட்டு காண்பித்துள்ளார்.
கரூர், திருப்பரங்குன்றம் சம்பவங்களில் தற்போதைய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை அளவுக்கு அரசியல் ரீதியாக ஸ்கோர் செய்யவில்லை என பேசப்படுகிறதே?
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான வீச்சு, ஸ்டைல், ஆளுமை இருக்கும். அப்படித்தான் அண்ணாமலையும், நயினார் நாகேந்திரனும். இருவருமே தங்களுக்கான பணியை, கடமையை சரியாக செய்து வருகின்றனர். மற்ற கட்சி விவகாரங்களில் எதுவரைக்கும் உள்ளே போக முடியுமோ, அதுவரைக்கும் மட்டும் தான் போக முடியும்.
கரூர் சம்பவம் சிபிஐ விசாரணையில் உள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திரியைக் கொண்டுபோய் கொடுத்து நாங்களா தீபம் ஏற்றச் சொன்னோம்?. அது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு. அந்த உத்தரவை அமல்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்பதால் தான் நயினார் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக பாஜகவை கழற்றிவிட்டு தவெகவுடன் கூட்டணி அமைக்க சிவப்பு கம்பளம் விரித்து காத்திருப்பதாக கூறப்படுகிறதே? ஒருவேளை அதுபோல நடந்தால் பாஜகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?
அதுபோல கனவிலும் நடக்காது. மக்கள் யாரும் முட்டாள்கள் கிடையாது. இன்னும் 3 மாதங்களில் தேர்தலை வைத்துக்கொண்டு இவங்க வேண்டாம், அவங்க வேண்டாம் என எந்தக் கட்சியும் முடிவு எடுக்காது. அப்படி முடிவு எடுத்தால் அந்த கட்சியின் ஸ்திரத்தன்மை, நம்பகத்தன்மை போய்விடும். என்டிஏ கூட்டணிக்கு தலைவர் பழனிசாமிதான் என்றும், முதல்வர் வேட்பாளரும் அவர் தான் என்றும் தெளிவாக அறிவி்த்து விட்டோம்.
விஜய் நான் தான் அடுத்த முதல்வர் எனக்கூறி வருகிறார். அப்படி இருக்கும்போது பழனிசாமி எப்படி அங்கு செல்வார்? மாறாக புது கட்சி ஒன்று விரைவில் எங்கள் கூட்டணிக்கு வரும் என பழனிசாமி கூறி வருகிறார். அது தவெக-வாக இருந்தால் உண்மையில் அகம் மகிழ்வது நாங்களாகத்தான் இருக்கும்.
திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே தான் போட்டி என விஜய் அடிக்கடி கூறி வரும் நிலையில், மும்முனைப்போட்டி நிலவி வாக்குகள் சிதறினால் அது யாருக்கு சாதகம்?
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தது திமுகவுக்குத்தான் பாதகம். எம்ஜிஆர், ஜெயலலிதா, இரட்டை இலை ரசிகர்கள் மறந்தும் கூட திமுகவுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள். அதுபோல உலக கதாநாயகன் மோடியை மனதில் கொண்டவர்கள் வேறு யாருக்கும் மாற்றிப் போட மாட்டார்கள். மும்முனைப் போட்டி நிலவினால் நிச்சயமாக அதிமுக - பாஜக கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்.
தவெகவை மனதில் வைத்துக்கொண்டு திமுகவை மிரட்டிப்பார்க்கும் வகையில் ‘ஆட்சியில் பங்கு’ என்ற அஸ்திரத்தை காங்கிரஸ் எடுத்துள்ளதே? அதுபோல பாஜகவுக்கும் எதிர்கால திட்டம் இருக்கிறதா?
ஆட்சியில் பங்கு வேண்டாம் என்பதை அதிமுகவிடம் ஆரம்பத்திலேயே தெளிவாக கூறிவிட்டோம். எங்களைப் பொருத்தமட்டில் 4 என்பது 40 ஆக மாறினால் அதுவே தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டதாகத்தான் அர்த்தம்.
பாஜகவின் எதிர்காலத்திட்டம் தமிழகத்தில் வலுவாக கால் ஊன்ற வேண்டும் என்பதே. ஒருவேளை விஜய்யின் தலைமையை காங்கிரஸ் ஏற்பதாக இருந்தால் துணை முதல்வர் வாய்ப்பு கிடைக்கும் என எண்ணி, காங்கிரஸ் மட்டுமல்ல திமுக கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் கூட திமுகவை மிரட்டி அரசியல் செய்யலாம்.