“சீட் வாங்குவதிலேயே காங்கிரஸாருக்கு குறி!” - பெமக தலைவர் என்.ஆர்.தனபாலன் நேர்காணல்

“சீட் வாங்குவதிலேயே காங்கிரஸாருக்கு குறி!” - பெமக தலைவர் என்.ஆர்.தனபாலன் நேர்காணல்
Updated on
2 min read

தமிழக தேர்தல் களம் புதுப் புது திருப்பங்களுடன் பரபரப்பாகி வரும் நிலையில், கடந்த முறை அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டியிட்ட ‘பெருந்தலைவர் மக்கள் கட்சி’ இம்முறை, ‘கூடுதல் தொகுதி’ கோரிக்கையுடன் காத்திருக்கிறது.

இந்தத் தேர்தலுக்கான அந்தக் கட்சியின் நிலைப்பாடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அக்கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலனிடம் ‘ஜனநாயகத் திரிவிழா’வுக்காகப் பேசினோம்.

Q

தேர்தல் நேரத்தில் மட்டும் உங்கள் தொகுதியில் பரபரப்பாகத் தெரியும் நீங்கள், அதன் பிறகு மக்களை சந்திப்பதில்லை என்ற விமர்சனம் இருக்கிறதே..?

A

நான் ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்து தொடர்ந்து களப்பணி ஆற்றினால், திடீரென கூட்டணியில் இருக்கும் இன்னொரு முக்கியமான கட்சிக்கு அந்தத் தொகுதியைத் தரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது. அப்போது, எனது உழைப்பு, நேரம், பணம் எல்லாம் வீணாகிவிடுகிறது. அதனால், நமக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் தேர்தல் நேரத்தில் இறங்கினால் தான் சரியாக இருக்கும்.

Q

கடந்த 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தீர்கள். இன்னமும் அதே கூட்டணியில் தொடர்கிறீர்களா... இம்முறை எந்தத் தொகுதியை கேட்பதாக உத்தேசம்?

A

இன்று வரை நாங்கள் அதிமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம். புத்தாண்டு அன்று கூட அதிமுக பொதுச்செயலாளரை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துவிட்டு வந்தேன். கடந்த காலங்களில் பெரம்பூர் தொகுதியில் சூழ்நிலை காரணமாகப் போட்டியிட்டேன். தற்போது தென் மாவட்டங்களில் நிற்கலாம் என்பது எனது விருப்பம். அதற்கான கடிதத்தையும் பழனிசாமியிடம் வழங்கியிருக்கிறேன்.

Q

தொகுதி பங்கீடு சமயத்தில் உங்கள் கட்சிக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா?

A

மூன்று முறை வெற்றி வாய்ப்பை இழந்தவன் நான். வெற்றிபெற்று இருந்தால் அடுத்ததாக இன்னும் இன்னும் கூடுதலாகக் கேட்பதற்கு எனக்கும் ஒரு தைரியம் வந்திருக்கும். எனக்குப் பின்னாலும் ஒரு பெரிய கட்சி வந்திருக்கும். அப்படி இல்லாத காரணத்தால் இன்றைக்கு, கொடுங்கள் என்று கேட்கும் இடத்தில் நாங்கள் இல்லை.

Q

சிறிய கட்சிகள் பெரும்பாலும் கூட்டணி தலைமை வகிக்கும் கட்சியின் சின்னத்திலேயே போட்டியிட வற்புறுத்தப்படுகிறார்கள். இம்முறை, உங்களுக்கு கூடுதல் தொகுதிகளையும் தனிச் சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பையும் கேட்பீர்களா?

A

நிச்சயம் வலியுறுத்துவோம். கூடுதல் தொகுதிகளையும் கண்டிப்பாகக் கேட்போம். ஆனால் பெரிய கட்சிகளை பொறுத்தவரை, என்னைப் போல் 10 பேரை அவர்களது சின்னத்தில் நிறுத்தத்தான் பார்ப்பார்கள். அப்போது தான் அவர்களது எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை அதிகமாகும். அதைத்தான் அவர்கள் விரும்புவார்களே தவிர, நாங்கள் தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என விரும்பினாலும் அது நடக்காது.

Q

எம்ஜிஆரைப் போல் முதல்வராகிவிடலாம் என விஜய் கனவு காண்பதாக நினைக்கிறீர்களா?

A

விஜய் புதிதாக அரசியலுக்கு வந்திருக்கிறார். வந்த வேகத்திலேயே முதல்வர் ஆக வேண்டும் என்கிறார். ஆனால், எம்ஜிஆர் ஒரே நாளில் முதல்வரானவர் அல்ல. அதிமுக, பாஜக போன்ற பலமான கட்சிகளுடன் இணைந்தால் தான் அவர் நினைத்ததைச் சாதிக்கலாம். தை பிறந்தால் மாற்றங்களும் வரலாம்.

Q

தைபிறந்தால் அதிமுக கூட்டணிக்குள் ஓபிஎஸ், டிடிவி.தினகரன், சசிகலா வருவதற்கும் வழிபிறக்குமா?

A

ஓபிஎஸ் எந்தவித நிபந்தனையும் இன்றி அதிமுக-வில் சேர ரெடி சொல்லிவிட்டார். சசிகலா, பிரிந்து சென்ற எல்லோரையும் மீண்டும் சேர்க்க வேண்டும் என்கிறார். டிடிவி.தினகரனும் ரெடி தான். ஆனால், முடிவு செய்ய வேண்டிய இடத்தில் இருக்கும் பழனிசாமி தான் இதுபற்றி முடிவு செய்ய வேண்டும்.

Q

கூட்டணி ஆட்சி, அதிகாரப் பகிர்வு கோரிக்கைகளால் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் பெரும் போராட்டமே நடக்கிறதே... இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

A

பாஜக ஆட்சியிலும் காங்கிரஸ் ஆட்சியிலும் தமிழக கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்திருக்கிறார்கள். ஆனால் தமிழக ஆட்சியில் மட்டும் அது நடக்கவில்லை. இங்கே காமராஜருக்குப் பிறகு திராவிடக் கட்சிகள் தான் ஆட்சி செய்கின்றன. 1967-ல், ஆட்சியைவிட்டு இறங்கிய காங்கிரஸ் இன்றுவரை கீழே தான் உட்கார்ந்து இருக்கிறது. இதைப்பற்றி காங்கிரஸ் கட்சியினரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவர்கள் சீட் வாங்குவதில் மட்டும் தான் குறியாக இருக்கின்றனர். என்னைப் பொறுத்தவரை கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளுக்கும் அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும்.

Q

அன்புமணியும் ராமதாஸும் ஆளுக்கொரு கூட்டணியில் துண்டு போட்டால் பாமக-வின் வாக்குகள் சிதறாதா?

A

ராமதாஸ் ஏன் தன் மகனுக்கு விட்டுக்கொடுக்கக் கூடாது என்று தான் பெரும்பாலான வன்னியர்கள் நினைக்கின்றனர். எனவே, பெரியளவில் வாக்குகள் பிரியாது. நேற்று வரை திமுக ஆட்சியை குறை சொல்லி வந்த ராமதாஸ், இன்று முதல்வர் ஸ்டாலின், நன்றாக ஆட்சி செய்வதாக சான்றிதழ் கொடுக்கிறார். இதிலிருந்து அவரது எண்ணம் தெரிகிறது. அதிமுக கூட்டணியில் 18 சீட் அன்புமணி வாங்கியிருக்கிறார் என்கிறார்கள். இப்போது அவரது அப்பா என்ன நினைப்பார்? தனக்கும் அதேபோல் வரவேண்டும் அல்லது அதில் பாதியாவது திமுக-விடம் கேட்பார். மாநிலங்களவையில் இடம் வேண்டும் என்பார். ஏற்கெனவே விசிக-வும் அந்தக் கூட்டணியில் இருப்பதால் ராமதாஸ் அந்தப் பக்கம் பேசினாலே நிச்சயம் சலசலப்பு உண்டாகும்.

“சீட் வாங்குவதிலேயே காங்கிரஸாருக்கு குறி!” - பெமக தலைவர் என்.ஆர்.தனபாலன் நேர்காணல்
“திமுக ஆட்சிக்கு வருவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது!” - மதிமுக அந்தரி தாஸ் திட்டவட்டம் | நேர்காணல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in