அமித் ஷா | கோப்புப் படம்
சென்னை: ‘மத்திய அரசின் பாதுகாப்பு எச்சரிக்கையை தமிழக அரசு மீறியுள்ளதால், தமிழகத்தில் மத்திய படைகளை உடனே குவிக்க வேண்டும்’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கடிதம் அனுப்பி உள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர், “திமுக அரசு தேசிய பாதுகாப்பை அலட்சியப்படுத்துகிறது. மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, பிப்.28 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் நாடு தழுவிய பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதை அலட்சியப்படுத்திவிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தனது கூட்டணி கட்சிகளான விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அடிப்படைவாத அமைப்புகளுடன் இணைந்து ஈரானுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்த அனுமதி அளித்துள்ளது.
காஷ்மீரில் இந்தியர்கள் கொல்லப்பட்டபோதோ அல்லது வங்கதேசத்தில் இந்துக்கள் வேட்டையாடப்பட்டபோதோ மவுனம் காத்த விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் சில முஸ்லிம் அமைப்புகள், இப்போது ஈரானுக்காகத் தெருவில் இறங்கிப் போராடுவது ஏன்?
இந்தியாவுடன் எந்தத் தொடர்பும் இல்லாத ஒரு விவகாரத்துக்காகத் தமிழகத்தில் போராட்டம் நடத்துவது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது. பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்திருந்த மார்ச் 1-ம் தேதி, சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட முயன்றது கடும் கண்டனத்துக்குரியது.
துபாய், கத்தார், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் லட்சக்கணக்கான தமிழர்கள் பணிபுரிகின்றனர். ஈரான் அந்த நாடுகளின் மீது தாக்குதல் நடத்தும்போது மவுனமாக இருக்கும் இந்த அமைப்புகள், இப்போது வன்முறையைத் தூண்டுவது அங்குள்ள இந்தியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்.
தமிழக அரசு மத்திய அரசின் பாதுகாப்பு எச்சரிக்கையை மீறியுள்ளதால், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக மத்திய பாதுகாப்புப் படைகளைத் தமிழகத்தில் குவிக்க வேண்டும்.
மேலும், முதல்வர், தலைமைச் செயலர், டிஜிபி ஆகியோருக்கு, சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டவும், பிரிவினைவாதப் போராட்டங்களைத் தடுக்கவும் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்’ என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.