

நெல்லை: நாங்குநேரி பெரும்பத்து பகுதியில் சாலை ஓரத்தில் நின்றவர்கள் மீது 9 பேர் கொண்ட கும்பல், அரிவாளால் தாக்கியதில் வடமாநில தொழிலாளி உள்பட 2 பேர் பலியாகினர். இந்நிலையில், சம்பவத்தில் ஈடுபட்டதாக கருதப்படும் ஆறு பேரை பிடித்து திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
நெல்லை மாவட்டம் நாங்குநேரி காவல் சரகம் , பெரும்பத்து பஜாரில், பைக்கில் வந்த 9 பேர் கொண்ட மர்ம கும்பல், அங்கு சாலையில் நின்று கொண்டிருந்த, பொதுமக்களை சரமாரியாக வெட்டியது. இந்த சம்பவத்தில் வடமாநில செங்கல் சூளை தொழிலாளி உள்பட இரண்டு பேர் பலியாகினர்.
நாங்குநேரி பெரும்பத்து பகுதிக்கு 9 பேர் கொண்ட மர்ம கும்பல் பைக்கில் வந்தது. அவர்கள் அங்குள்ள டீ கடை அருகே நின்று கொண்டிருந்த நபர்களை சரமாரியாக வெட்ட ஆரம்பித்தபோது, அங்கு நின்ற பொதுமக்கள் அங்கிருந்து ஓடினர். அவர்கள் கண்மூடித்தனமாக வெட்டியதில் 6 பேருக்கு பலத்த வெட்டுக் காயம் விழுந்தது.
இந்த கொடூர தாக்குதலில் பெரும்பத்து இந்திரா காலனியை சேர்ந்த ஜான் (42) மற்றும் பெயர் தெரியாத வட மாநில செங்கல் சூளை தொழிலாளி ஆகிய இரண்டு பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் படுகாயம் அடைந்த பெரும்பத்து பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம் மகன் நெல்சன் (58), பால்வண்ணன் மகன் பிரபாகரன், வைகுண்டம் மகன் ராமசாமி, வீராங்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கணேசன் (53) ஆகியோர் காயமடைந்தனர்.
மேலும் சம்பவ இடத்திலிருந்து தப்பித்துச் சென்ற எதிரிகள், புளியங்குளம் அருகே சென்றபோது அந்தபகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சசிகுமார் என்பவரையும் அரிவாளால் தாக்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அசம்பாவிதங்களைத் தடுக்க அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
தப்பி ஓடிய கொலையாளிகளை கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி தாக்குதலில், 2 பேர் பலியான நிலையில் 5 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர், திருநெல்வேலி முகாம் தென் மண்டல காவல்துறை தலைவர் ஐஜி விஜயேந்திர பிதாரி, திருநெல்வேலி சரக காவல்துறை தலைவர் டி.ஐ.ஜி சரவணன், திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.பி டாக்டர் பிரசன்ன குமார் தலைமையில் விரிவான ஆலோசனை தற்போது நடைபெற்று வருகிறது.
சம்பவத்தில் ஈடுபட்டதாக கருதப்படும் 6 பேரை பிடித்து திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.பி டாக்டர் பிரசன்ன குமார் தகவல் அளித்துள்ளார். மேலும், தற்போது நாங்குநேரியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.