சென்னை: “பாஜகவில் இருந்து ஒரு சிலர் அண்ணாமலையின் இயக்கத்துக்குச் சென்று இருக்கிறார்கள். தெரிந்தோ, தெரியாமலோ பாஜகவில் இருந்து விலகியவர்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்பி வரலாம். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம். அண்ணாமலையோடு எனக்கு எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை” என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “அண்ணாமலை 'வீ த லீடர்ஸ்' என்ற இயக்கத்தை ஆரம்பித்திருப்பதாக தொலைக்காட்சி மூலம் அறிந்து கொண்டேன். அதில் ஒரு சில பாஜக பொறுப்பாளர்கள் இணைந்துள்ளனர். அதோடு அடிமட்ட பொறுப்பாளர்களும் அங்கு சென்றுள்ளனர்.
பிரதமர் மோடியின் ஆசிர்வாதத்தை பெற்றுள்ளோம். இது ஓர் இயக்கம்தான் என்றும் சொல்லியிருக்கிறார்கள். அவர்களை மூளைச் சலவை செய்துள்ளனர். பாஜகவில் இருந்து விலகியவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்பியதாகத்தான் வரலாறு உள்ளது.
பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரின் ஆசிர்வாதம் எந்த இயக்கத்துக்கும் கிடையாது. பாஜக நாடு, தேசம் என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில்தான் இயங்கி கொண்டிருக்கிறது. பாஜக தொண்டர்கள் எதையும் நம்பி, எங்கும் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அந்த இயக்கத்திலும் இருந்துகொண்டு, பாஜகவிலும் இருக்கலாம் எனச் சொல்வார்கள். ஆனால் அப்படி இருக்க முடியாது.
பாஜக உலகிலேயே மிகப் பெரிய கட்சி. உலகத் தலைவர்கள் வரிசையில் முதல் வரிசையில் இருக்கிறார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் பங்கேற்ற அனைத்து மேடைகளிலும் முன்னிருந்து நிகழ்ச்சிகளை நடத்தியவர் அண்ணாமலை. கடந்த பொதுத் தேர்தலில் கூட தனி விமானம் மூலம் 100 தொகுதிகளில் பிரச்சாரம் செய்தது அண்ணாமலை தான். அவருக்கு ஏதாவது கருத்து வேறுபாடு இருந்திருந்தால் அன்றைக்கே சொல்லி இருக்கலாம். ஆனால், இப்போது இது குறித்து சொல்வது சரியாக இருக்காது.
பாஜகவில் இருந்து ஒரு சிலர் அண்ணாமலையின் இயக்கத்துக்குச் சென்று இருக்கிறார்கள். அவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ அங்கு சென்று இருக்கலாம். அவர்கள் மீண்டும் இந்தக் கட்சியில் இணைய வேண்டும். எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக பலமாகத்தான் இருக்கிறது; யார் பாஜக பலவீனமாக இருக்கிறது என சொன்னார்கள்?
அதிமுகவில் நடப்பது உட்கட்சி பிரச்சினை. அது குறித்து நான் பேசமுடியாது. இதே கூட்டணியோடு சேர்ந்து உள்ளாட்சித் தேர்தலில் பாஜக போட்டியிடும்.
அண்ணாமலையுடன் நல்ல உறவுடன்தான் இருந்தேன். அண்ணாமலையோடு எனக்கு எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஜூன் 4 அன்று கூட அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தேன்.
திமுக - காங்கிரஸ் பிரிக்க முடியாத கூட்டணியாக இருந்தது. இப்போது காங்கிரஸ் விலகிச் சென்றுவிட்டது. காங்கிரஸ் கட்சி தோழமைக் கட்சிகளை தோளுக்கு மேல் ஏறி நின்று செவியைக் கடிக்கக் கூடிய கட்சி. அவர்களை நம்பிப் போனால் இதுதான் நடக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “கவனச் சிதறலை உருவாக்கும் பல்வேறு செயல்கள், அரசியல் நிகழ்வுகள் நம்மை சுற்றி நடந்தாலும், அதனால் பாதிக்கப்படாமல் பாதையிலிருந்து விலகாமல், பிரதமர் மோடி மற்றும் நமது தலைவர்கள் முன்னெடுத்துக் கொண்ட இலக்கினை நோக்கிய பயணமே நமது பயணமாகும்.
கட்சியின் உறுப்பினராகவோ, நிர்வாகியாகவோ இருந்து கொண்டு அரசியல் சார்ந்த, அரசியலில் ஈடுபட விருப்பமுள்ள இதர அமைப்புகளுடனும் தொடர்பில் இருத்தல் அல்லது அந்த அமைப்புகளின் உறுப்பினராதல் என்பது நாம் நமது கட்சிக்கு செய்யும் துரோகமாகும்.
பிரதமர் மோடி அரசியலை முன்னெடுக்கும் வேறெந்த இயக்கத்திற்கும் ஆதரவோ, ஆசியோ வழங்கவில்லை. நமது தொண்டர்களும், நிர்வாகிகளும் பாஜக தவிர அரசியலை மையமாக வைத்து நடக்கும் இதர அமைப்புகளின் உறுப்பினராகவோ, ஆதரவாளராகவோ இருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அப்படி இருந்தால் அது கட்சி விதிமீறலாக கருதப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.