அண்ணாமலை

 
தமிழகம்

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” - அண்ணாமலை

எஸ்.விஜயகுமார்

சேலம்: “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று பிரதமர் மோடி பாஜகவினருக்கு கட்டளையிட்டுள்ளார். அடுத்த 10 நாட்களும் பாஜகவினர் அனைவரும் கண் துஞ்சாது தேர்தல் பணியாற்ற வேண்டும்” என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சேலம் தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் வினோத், சேலம் வடக்கு தொகுதி பாமக வேட்பாளர் சதாசிவம் ஆகியோரை ஆதரித்து சேலம் பட்டைக்கோயில் அருகே பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தின்போது பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது: “சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணி 10 தொகுதிகளைக் கைப்பற்றியது. இந்த தேர்தலில் 11-க்கு 11 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்.

          

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, சேலத்தில் மேம்பாலம், விமான நிலையம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், திமுக ஆட்சியில் அமைச்சர்களின் பி.ஏ.க்கள் தான் மேயர்களாக வந்தார்கள்.

படம் : எஸ்.குரு பிரசாத்

மதுரையில் மேயராக இருந்தவர் குப்பையில் ரூ.200 கோடி ஊழல் செய்தார். 2025-லேயே அவர் ராஜினாமா செய்துவிட்டார். பல இடங்களில் மேயர்கள் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. துணை முதல்வர் உதயநிதி தற்குறியாக இருக்கிறார்.

அவர் செய்த திட்டங்களைக் கூறாமல், ஆபாசமாக பேசுகிறார். அவர் டயப்பர் போட்ட காலத்திலேயே எம்எல்ஏ.வாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி.

கடந்த ஒரு வாரமாக, உதயநிதி பிரச்சாரத்தின்போது மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்.

கடந்த 5 ஆண்டுகளில் 2,080 பாலியல் வன்கொடுமைகள், 8 ஆயிரத்து 8 படுகொலைகள் நடந்துள்ளன. 65,512 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருக்கும்வரை, கஞ்சாவை ஒழிக்க முடியாது.

எடப்பாடி பழனிசாமி முதல்வரானதும் 100 நாட்களில் கஞ்சா நடமாட்டத்தை கட்டுப்படுத்திவிடுவார்.

பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நடந்தாய் வாழி காவிரி திட்டத்துக்கு ரூ.11,841 கோடி ஒதுக்கீடு பெற்றோம். ஆனால், அதை திமுக செயல்படுத்தவில்லை என்றார். காவிரி - குண்டாறு இணைப்பு, திருமணிமுத்தாறு - காவிரி போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால், விவசாயம் தெரிந்த எடப்பாடி பழனிசாமிதான் முதல்வராக வர வேண்டும்.

டிஜிபி, தலைமைச் செயலாளர் ஆகியோரை தேர்தல் ஆணையம் மாற்றிவிட்டதாக, திமுக புகார் கூறுகிறது. ஆனால், எடப்பாடி தொகுதியில் வேட்புமனு தாக்கலின்போது, திமுக வேட்பாளரும், மாற்று வேட்பாளரான அவரது மனைவியும் இடம் மாறி கையெழுத்து போட்டனர்.

உதயநிதி தனது மனுவில் சொத்து விவரங்களை இணைக்காமல் பின்னர்தான் கொடுத்தார். இதற்காக, அவர்களது மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தலைமை செயலாளர் நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழகத்தில் 8 மாத காலமாகவே டிஜிபி நியமிக்கப்படவில்லை. பொறுப்பு டிஜிபியை தான் முதல்வர் ஸ்டாலின் நியமித்து இருந்தார். எனவே, தேர்தல் ஆணையம் தமிழகத்தின் டிஜிபியை மாற்றவில்லை, டிஜிபியை நியமித்துள்ளது. பாஜக சாதி, மதம் பார்ப்பதில்லை. ஆனால், முஸ்லீம்கள் திமுகவுக்கு வாக்களிக்கிறீர்கள், அவர்கள் உங்கள் பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்வதில்லை.

ஹஜ் பயண உதவி, முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ஆகியவற்றை பாஜக வழங்குகிறது. உங்கள் வளர்ச்சிக்காக, அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

சேலத்தில் 11 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியை வெற்றி பெறச்செய்து, முழு சாவியையும் கொடுத்து, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குங்கள். பாஜகவில் தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் பணியாற்றி, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குங்கள் என பிரதமர் மோடி கட்டளையிட்டுள்ளார். எனவே, அடுத்த 10 நாட்களும் பாஜகவினர் கண் துஞ்சாது பணியாற்றுங்கள்” இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT