“தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்கும் போது கனிமொழி மவுனம் காப்பது ஏன்... தனது அண்ணனை பார்த்து பயமா?” என பாஜக மாநில துணை தலைவர் நடிகை குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக சென்னை கமலாலயத்தில் குஷ்பு செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழக முதல்வர் தன்னை இந்த மாநிலத்தின் ‘தந்தை’ என்று அழைத்துக்கொள்ள ஆசைப்படுகிறார். ஆனால், ஒரு தந்தையின் முதல் கடமை தன் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதே. இரண்டரை வயதுக் குழந்தை முதல் 80 வயது மூதாட்டி வரை பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அன்றாடம் அரங்கேறிக் கொண்டிருக்கும் போது, எந்தத் தந்தை மவுனமாக இருப்பார்? தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும்போது முதல்வர் காட்டும் மவுனம், அவர் தன்னை ‘தந்தை’ என்று அழைத்துக்கொள்வதற்கே முரணாக இருக்கிறது.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. விழுப்புரம் மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள் குறித்து கனிமொழி எம்.பி ஏன் மவுனம் காக்கிறார்? கேள்வி கேட்கத் தன் அண்ணனைப் பார்த்து அவர் பயப்படுகிறாரா? இதே நிகழ்வுகள் அதிமுக ஆட்சியில் நடந்திருந்தால், திமுக-வினர் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தியிருப்பார்கள். இப்போது ஏன் இந்த இரட்டை வேடம்? திமுக-வினர் பெண்களை வெறும் பாலியல் பொருளாகப் பார்ப்பதால் தான், மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பெருகி வருகின்றன.
பண பலத்தால் மட்டும் ஒரு நாடு முன்னேறிவிட முடியாது. மக்களுக்கு உண்மையான நன்மைகளைச் செய்யும் போதுதான் வளர்ச்சி சாத்தியம். ஆனால், திமுக அரசிடம் அத்தகைய தொலை நோக்குத் திட்டங்கள் எதுவும் இல்லை. தமிழகத்தின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டிவிட்டது. ஒருபுறம் தன்னை ‘அப்பா’ என்று சொல்லிக்கொண்டே, மறுபுறம் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்து ஒட்டுமொத்தக் குடும்பங்களையும் முதல்வர் சீரழித்துக் கொண்டிருக்கிறார்.
மக்களின் வரிப்பணத்தில் பெரும்பகுதியைச் சுரண்டிவிட்டு, மீதமுள்ள சிறு தொகையை மக்களுக்குப் பிச்சையாகப் போடும் நிலையே இங்கு நிலவுகிறது. பெண்களுக்கு மாதம் ரூ.1,000 அல்லது 2 ஆயிரம் ரூபாய் கொடுப்பது மட்டும் முன்னேற்றமாகிவிடாது. பெண்கள் சொந்தக் காலில் நிற்பதே உண்மையான வளர்ச்சி. ஆட்சிக்கு வந்து பணம் சம்பாதிப்பது மட்டுமே உங்கள் லட்சியம் என்றால், மக்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? பதில் சொல்லுங்கள் முதல்வரே. இவ்வாறு அவர் கூறினார்.