நயினார் நாகேந்திரன், காடேஸ்வரா சுப்பிரமணியம், ராம.ரவிக்குமார், ரமேஷ், குற்றாலநாதன்
மதுரை / சென்னை: திமுக அரசு இந்துக்களுக்கு விரோதமாக செயல்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வராசுப்பிரமணியம் உள்ளிட்டோர் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது:
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்: திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டதை, தமிழகம் முழுவதற்குமான வெற்றியாகப் பார்க்கிறோம். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தேவையின்றி தலையிடுகிறது. நீதிபதியின் தீர்ப்பை அரசும், காவல் துறையும் ஏற்பதுதான் நியாயம். தமிழக அரசு தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராகவே செயல்படுகிறது.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்: சிறுபாண்மையினர் வாக்குகளுக்காக திருப்பரங்குன்றம் விவகாரத்தை அரசியலாக்குகிறார்கள். திமுக அரசு இந்துக்களுக்கு மட்டும் விரோதமாக செயல்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் வரும் தேர்தலில் பதிலடி கிடைக்கும். 100 ஆண்டு போராட்டத்துக்கு தற்போது வரலாற்று வெற்றி கிடைத்துள்ளது.
இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம.ரவிக்குமார் (திருப்பரங்குன்றம் வழக்கின் மனுதாரர்): திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிமன்றங்கள் பல வழக்குகளில் உத்தரவு பிறப்பித்துள்ளன. அதன் அடிப்படையில் நாங்கள் வழக்கு தொடர்ந்தோம். இந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முருகனுக்கு கிடைத்த வெற்றியாகும். இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடக்கக்கூடிய அநியாயங்களுக்கு சவுக்கடி கிடைத்திருக்கிறது. சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று கூறிக்கொண்டு, கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை தமிழக அரசு புண்படுத்திவிட்டது.
ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ்: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதில் ஆட்சேபனை இல்லை என்று 2005-ம் ஆண்டிலேயே
வக்பு வாரியம் கூறிவிட்டது. இந்த விவகாரத்தில் அரசியலை கலக்கக் கூடாது. ஆனால்,தமிழக தேர்தலை மனதில்கொண்டும், சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காககவும் தீபம் ஏற்றுவதை தடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவை அவமதித்து விட்டது. வக்பு வாரியமே ஆட்சேபனை செய்யாத நிலையில், தமிழக அரசு அவசர கதியில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது கண்டனத்துக்குரியது.
இந்து முன்னணி மாநிலச் செயலாளர் கா.குற்றாலநாதன்: திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணியினர் கண்ணியத்துடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொண்டாலும், போலீஸார் கலவரத்தை தூண்டுவதுபோல நடந்துகொண்டனர். இந்த விவகாரத்தில், காவல் துறை உயரதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் பின்னணியில் இருப்பதால்தான், காவல் ஆணையர் லோகநாதன் தைரியமாக செயல்படுகிறார். அவருக்குப் பின்னால் திமுக அரசு உள்ளது.
முகலாயர் ஆட்சியில் இந்துக்கள் எந்த அளவுக்கு கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்பதை வரலாற்றில் படித்துள்ளோம். தற்போது அந்த நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலினை அவுரங்கசீப் வடிவில் பார்க்கிறேன். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்துக்கள் திமுகவுக்கு பதிலடி கொடுப்பார்கள்.