பழநி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததைக் கண்டித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள், தொண்டர்கள்.
பழநி: பழநி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததை கண்டித்து பழநி வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை முற்றுகையிட்டு நிர்வாகிகள், தொண்டர்கள் நேற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பழநி தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், அதிருப்தி அடைந்த பாஜக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இளைஞரணி நிர்வாகி சதீஷ் கட்சி அலுவலக மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பழநி வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பழநி அடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்தில் சிறப்பு யாகம் நடத்திவிட்டு, மலைக்கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் நேற்று ஆசிரமம் திரும்பினார்.
அப்போது அவரை, பாஜக மகளிரணியினர் முற்றுகையிட்டு பழநி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பழநியை பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும். எங்களுக்கு முடிவு தெரியாமல் உங்களை இங்கிருந்து அனுப்ப முடியாது என்று நிர்வாகிகள் கூறினர்.
அதற்கு எல்.முருகன், ‘பழநியை ஒதுக்காதது குறித்து உங்களின் ஆதங்கத்தையும், கோரிக்கையையும் மேலிடத்தில் கூறி, பழநியை பாஜகவுக்கு ஒதுக்க ஏற்பாடு செய்கிறேன்’ என்று கூறிவிட்டு காரில் ஏற முயன்றார். ஆனால் அவரது காரை மறித்து, தரையில் அமர்ந்து தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், ‘பழநியை ஒதுக்கவில்லையெனில் எங்களுக்கு கட்சியும் வேண்டாம், பதவியும் வேண்டாம்’ என்று முழக்கம் எழுப்பினர். இந்த போராட்டத்துக்கு நடுவே கோபமாக காரில் காத்திருந்த எல்.முருகன், நிர்வாகிகள் சிலரை அழைத்து தொகுதி ஒதுக்குவது தொடர்பாக பேசலாம் என்று கூறியும் கோயில் என்றும் பார்க்காமல் போராட்டத்தில் ஈடுபடுவது நல்லதல்ல.
இப்படி நடந்து கொள்வது சரியா என்று கண்டித்தார். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களை திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் ஜெயராமன் சமாதானப்படுத்தி, மத்திய அமைச்சர் பழநியை பாஜகவுக்கு பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளார். நல்ல பதில் கிடைக்கும்.
போராட்டத்தைக் கைவிட்டு, அவர் செல்ல வழிவிடுங்கள், என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். அதன் பின்னர், எல்.முருகன் சென்றார்.
இதனிடையே, இந்த போராட்டத்தால் அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட பழநி தொகுதி பாஜகவுக்கு கை மாறிவிடுமோ என்ற ஒருவித அச்சத்தில் பழநி பேரவைத் தொகுதி அதிமுகவினர் உள்ளதாக தெரிகிறது.