தமிழகம்

“மதவாத அரசியல் செய்வது திமுக தான்” - பாஜக மாநில துணை தலைவர் டால்பின் ஸ்ரீதர் தடாலடி நேர்காணல்

துரை விஜயராஜ்

தற்போதைய அரசியல் சூழல்கள், கூட்டணி வாய்ப்புகள் குறித்து ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக பாஜக மாநில துணை தலைவர் டால்பின் ஸ்ரீதரிடம் பேசினோம். அவரது கருத்துக்கள் இங்கே.

தவெகவில் இருக்கும் அளவுக்கு பாஜக மீது இளைஞர்களுக்கு ஈர்ப்பு இல்லை என்கிறார்களே?

சினிமா கவர்ச்சியில் ‘ஜென் - ஸீ’ முதல் அனைத்து தரப்பினரும் விஜய்-க்கு ரசிகர்களாக மட்டும்தான் இருக்கிறார்கள். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேநேரத்தில்,15 கோடி உறுப்பினர்கள் இருக்கும் பாஜகவின் தேசிய செயல் தலைவராக 45 வயதான நிதின் நபின் என்ற இளைஞரை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். ‘ஜென்-ஸீ’ இளைஞர்கள் வாழ்க்கையின் எதிர்கால திட்டங்கள் குறித்து பல்வேறு கனவுகளுடன் இருப்பவர்கள். அவர்கள் நிச்சயம் பாஜகவின் பக்கம்தான் இருக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் ஆயுதமாக விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது என்கிற ராகுல்காந்தி குற்றச்சாட்டு பற்றி?

இதுவரை 97 தோல்விகளை சந்தித்துள்ள ராகுல்காந்தி, வெளிநாடுகளுக்கு சென்று, நம் நாட்டின் ஜனநாயகத்தை பற்றியும், மதச்சார்பின்மை பற்றியும் தவறாக பேசுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். நம் நாட்டை காட்டிக் கொடுத்து வருகிறார். நம் நாட்டில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்கிறார். உண்மையில் வங்கதேசத்தில் தான் சிறுபான்மையினர் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார்கள்.

அதாவது அங்கிருக்கும் இந்துக்கள். அதை பற்றி இங்கிருக்கும் இண்டியாகூட்டணி கட்சியினர் யாரும் வாய் திறப்பதில்லை. ஆனால், இஸ்ரேல், பாலஸ்தீனம் விவகாரத்துக்கெல்லாம் பொங்கி எழுவார்கள். எல்லாவிஷயங்களையும் இஸ்லாமியர்களின் வாக்கு வங்கி அரசியலோடு இணைத்து பேசும் மோசமான நிலையில்தான் இண்டியா கூட்டணி இருக்கிறது.

பாஜக-வின் மத அரசியலை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்ற திமுக-வின் விமர்சனத்துக்கு உங்கள் பதில் ?

உண்மையில் மதவாத அரசியலை செய்வது திமுகதான். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அறநிலையத்துறையின் பணத்தை செலவு செய்து, அறநிலையத்துறைக்கு எதிராகவே உச்சநீதிமன்றத்தில் வாதாடுகிற மோசமான இந்து விரோத அரசாக திமுக உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இந்துக்கள் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூட தெரிவிப்பது இல்லை. ஆனால், கிறிஸ்தவ, இஸ்லாமிய விழாக்களில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி. எல்லா மதத்தின் பண்டிகைகளிலும் கலந்து கொண்டு வாழ்த்து கூறுகிறார். உண்மையில் பாஜக தான் எல்லோரையும் சமமாக வழிநடத்துகிறது. சிறுபான்மையினரை மட்டும் வைத்து கொண்டு தாஜா செய்ய நினைக்கும் அரசியலை திமுக செய்கிறது.

தவெக ஒரு தூய சக்தி என விஜய் பேசியதை கவனீத்தீர்களா?

திமுக ஒரு தீய சக்தி என மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சொன்னார்கள். திமுக தீய சக்தி, அதை ஒழிக்க வேண்டும் என்று பாஜகவும் தான் சொல்கிறது. ஆனால், திடீரென களத்துக்கு வந்து, திமுக தீய சக்தி, தவெக தூய சக்தி என விஜய் சொல்லிக் கொண்டிருக்கிறார். விஜய் எந்த ஊழலை ஒழித்தார், அவர்கள் தங்களை தூய சக்தி என சொல்வதற்கு. பிரதமர் மோடி முதல்வராக இருந்தது முதல் தற்போது வரை, ‘நானும் ஊழல் செய்யமாட்டேன். ஊழல் செய்பவர்களையும் பக்கத்தில் வைத்துக்கொள்ள மாட்டேன்’, என உறுதியுடன் இருந்து வருகிறார். எதுகை மோனைக்காக மட்டும் தான் விஜய்யால், தீய சக்தி, தூய சக்தி என பேச முடியும். உண்மையில், பாஜக தான் தூய சக்தி.

தவெக-வுடன் ஓபிஎஸ் கூட்டணி வைக்க போவதாக கூறுகிறார்களே?

தீய சக்தியை ஒழிக்க அந்த கொள்கை கொண்ட எல்லோரும் ஒரே அணியில் இருக்க வேண்டும். இதை தான், ஓபிஎஸ், டிடிவி போன்றவர்களுக்கு பாஜக சொல்லி வருகிறது.

தேமுதிகவுக்கு 6 சீட் என தகவல் வெளியிட்ட கட்சிக்கு அழிவுகாலம் தொடங்கி விட்டது என பிரேமலதா விமர்சித்ததை பற்றி?

இந்த தகவலை வெளியிட்டது திமுகவின் ‘பென்’ மீடியாவும், திமுகவிடம் இருந்து பணம் பெற்று கொண்டு செயல்படுகிற ஊடகங்களும் தான். பியூஸ் கோயல் - பழனிசாமி பங்கேற்ற கூட்டத்தில் இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். தொகுதிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்கள், திமுகவால் பரப்பப்பட்ட வதந்தி. எனவே, திமுகவுக்கு தான் அழிவு காலம் என பிரேமலதா சொல்கிறார்.

விஜய், சீமான் போன்றோர் பாஜகவின் கையாட்கள் என திருமாவளவன் கூறியுள்ளாரே?

தொண்டர்களை உற்சாகப்படுத்த திருமாவளவனும், அவரது கட்சியினரும் தரமில்லாமல் பேசி வருகின்றனர். திருமாவளவனால் விழுப்புரம், சிதம்பரத்தை தாண்டி ஒன்றுமே செய்ய முடியாது. பொதுத் தொகுதியில் ஒரு சீட்வாங்கி அவரால் நிற்க முடியாது. திமுகவில் அதிக சீட் கேட்பதற்காகவும், தன்னுடைய இருப்பை தக்க வைத்து கொள்ளவும் இவ்வாறு பேசுகிறார்.

SCROLL FOR NEXT