சென்னை: குழந்தைகள், பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதில் சமூகத்துக்குதான் பொறுப்பு இருப்பதாக கூறி தட்டிக்கழிப்பதா என்று கனிமொழி எம்.பி.க்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
திமுக எம்.பி. கனிமொழி தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருந்ததாவது: விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளியை காவல்துறை கைது செய்துள்ளது.
அந்த சமூக விரோதி உச்சபட்ச தண்டனை பெறுவதை உறுதிசெய்வதோடு, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு உரிய நீதி கிடைக்கவும், இத்துயரில் இருந்து அவர்கள் மீண்டு வரவும் துணையாக இருப்போம்.
குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை சட்டம் உறுதிசெய்யும். ஆனால், குழந்தைகள், பெண்களுக்கான பாதுகாப்பான சூழலை ஒரு சமூகமாக நாம் அனைவரும் சேர்ந்தே உறுதிப்படுத்த முடியும். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், தமிழக பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளதாவது: குற்றவாளிகள் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதே காவல் துறையின் கடமை.
சட்டம் - ஒழுங்கு சீர்குலையாமல் பார்த்துக் கொள்வதே அவர்களது வேலை. சமூகத்தில் பலர் பலவிதமாக இருப்பார்கள். அவர்களைக் கண்காணித்து சட்டங்களை அமல்படுத்துவதும், சூழலுக்கு ஏற்ற சட்டங்களை உருவாக்குவதும் மாநில அரசின் பொறுப்பு.
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக வாக்குறுதி அளிப்பதால்தான் நீங்கள் சொல்கிற சமூகம் உங்களை ஆளவைத்தது.
ஆனால், 5 ஆண்டுகள் உங்கள் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு, இப்போது சமூகத்துக்குதான் பொறுப்பு இருக்கிறது என்று தட்டிக்கழிப்பதுதான் திராவிட மாடல். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.