‘குற்றப்பத்திரிகை, குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு’ என்ற பெயரில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்பான குற்றச்சாட்டுகளை பியூஷ் கோயல், பாஜக அலுவலகமான கமலாலயத்தில் வெளியிட்டார். உடன் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர்.
மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான, பியூஷ் கோயல், நேற்று மாலை டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னைக்கு வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பலமான என்டிஏ கூட்டணி, தேர்தல் பிரச்சாரத்தை, முழு எழுச்சியுடன் தொடங்கியுள்ளது.
திமுக அரசை முடிவுக்கு கொண்டுவர தொடங்கி இருக்கிறோம்.திமுக காங்கிரஸ் கூட்டணி, உயர் மட்ட அளவில் பல்வேறு ஊழல் முறைகேடுகள் செய்து, மக்களுக்கு மோசமான சட்டம் ஒழுங்கு இல்லாத ஆட்சியை கொடுத்துக் கொண்டு இருக்கிறது. என்டிஏ கூட்டணி, இந்த தேர்தலில் முழு வெற்றியை அடையும். இந்த வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணி, திமுகவை வீழ்த்தும்.
தமிழகத்தில் பாஜக போட்டியிட இருக்கும் தொகுதிகளின் வேட்பாளர்கள் யார்? என்பது குறித்து, ஆலோசனை நடந்து கொண்டு இருக்கிறது. அடுத்த ஓரிரு தினங்களில், இறுதி முடிவு எடுத்து, தமிழக பாஜக வேட்பாளர் பட்டியலை அதிகாரபூர்வமாக, டெல்லியில் பாஜக தலைமை வெளியிடும். திமுக கூட்டணியில் பிரச்சனை இன்னும் ஓயவில்லை. ஆனால் எங்களுடைய என்டிஏ கூட்டணி, ஒரு குடும்பம் போல் ஒற்றுமையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.