தமிழகம்

இல்லாத ஆட்சியில் தவெக யாருக்கு பங்கு கொடுக்கும்? - பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் நேர்காணல்

துரை விஜயராஜ்

கூட்டணிகள் இன்னும் முடிவாகாத நிலையிலும் பாஜக மாநில செயலாளரான ஏ.அஸ்வத்தாமனை பண்ருட்டி தொகுதிக்கான வேட்பாளராக சூசகமாக அடையாளம் காட்டி இருக்கிறது பாஜக. இதையடுத்து தொகுதியை தி.வேல்முருகனிடம் இருந்து மீட்டெடுக்கும் வேலைகளைத் தொடங்கிவிட்ட அஸ்வத்தாமன் ‘இந்து தமிழ் திசை’யின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு ரத்து செய்தது சரிதானா?

திமுக-வுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களை கொண்டு வருவது நோக்கமல்ல. ஏனென்றால், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தேவையான அடிப்படை ஆவணங்கள் எதையுமே அவர்கள் மத்திய அரசிடம் கொடுக்கவில்லை. இது அறியாமையால் செய்தது போல் தெரியவில்லை. வேண்டுமென்றே அற்ப அரசியலுக்காகச் செய்திருக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மத்திய பாஜக அரசு தொடர்ந்து புறக்கணிப்பதாக ஸ்டாலின் குற்றம்சாட்டுகிறாரே?

சென்னை மெட்ரோ 2-ம் கட்டம் மாநில அரசின் திட்டம். ஆனால், மாநில அரசிடம் அதற்கான நிதி இல்லை என்பதால் ரூ.63 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. வேறு எந்த மாநிலத்துக்கும் மத்திய அரசு இப்படி நிதி ஒதுக்கியது கிடையாது.

இது தமிழகத்தின் மீது பாஜக அரசு எந்த அளவு அக்கறை காட்டுகிறது என்பதற்கான உதாரணம். அதற்கான நன்றி உணர்வுகூட இல்லாமல் இப்படி அபாண்ட பொய்களை முதல்வர் பரப்புவது நேர்மையான அரசியல் ஆகாது.

எஸ்ஐஆர் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் பதறுகின்றனவே..?

எஸ்ஐஆரில் 10 சதவீத வாக்காளர்களாவது நீக்கப்படுவார்கள். ஏனென்றால், சிலர் இறந்திருப்பார்கள், இடம் பெயர்ந்திருப்பார்கள். ஆண்டு கணக்கில் எஸ்ஐஆர் நடக்காததால் இரட்டை வாக்காளர்களும்கூட அதிகரித்திருப்பார்கள். இவர்களை நீக்கித்தான் ஆக வேண்டும். இறந்தவர்களையும் இரட்டை வாக்குகளையும் நீக்குவது வாக்குத் திருட்டா... அல்லது பட்டியலில் அவை இருக்க வேண்டும் என்று நினைப்பது வாக்குத் திருட்டா?

தவெக-வினருக்கு எஸ்ஐஆர் படிவங்கள் மறுக்கப்படுவதாக விஜய் குற்றம்சாட்டி இருக்கிறாரே..?

எஸ்ஐஆர் படிவம் 18 வயது நிரம்பியவர்களுக்குத் தான் கொடுப்பார்கள். விஜய் கட்சியில் இன்னும் பலர் ஸ்கூல் தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு எஸ்ஐஆர் படிவம் தரப்படமாட்டாது. தவெக-வைப் பொறுத்தவரை திமுக என்ன சொல்கிறதோ, அதை அப்படியே அவர்களும் சொல்கிறார்கள்.

எஸ்ஐஆர் பற்றி முதல்வர் ஸ்டாலின் 8 நிமிட வீடியோ வெளியிட்டால், விஜய் எட்டரை நிமிட வீடியோ வெளியிடுகிறார். திமுக-வின் ஊதுகுழலாகவே தவெக செயல்படுகிறது. அவர்களுக்கு என்று தனிப்பட்ட கொள்கையோ, கருத்தோ கிடையாது.

அதிகாரத்தில் பங்கு கேட்கும் தேமுதிக, வாய்ப்புக் கிடைத்தால் தவெக-வுடன் கைகோக்கலாம் என்று பார்க்கிறதோ?

ஆட்சிக்கு வரும் தகுதியையே இன்னும் வளர்த்துக் கொள்ளாத தவெக, ஆட்சியில் பங்கு தருவோம் என்று சொல்வது, வங்கியில் அக்கவுன்டே இல்லாமல் செக் கொடுப்பது போல் தான். இல்லாத ஆட்சியில் அவர்கள் யாருக்குப் பங்கு கொடுக்க போகிறார்கள்?

பாஜக-வை கொள்கை எதிரி என்கிறாரே விஜய்?

கொள்கையே இல்லாத தவெக-வுக்கு எப்படி கொள்கை எதிரி இருக்க முடியும்? விஜய்க்கு எழுதி கொடுப்பவர், ‘கொள்கை எதிரி திமுக... அரசியல் எதிரி பாஜக’ என எழுதித்கொடுத்தாலும் அதையும் அப்படியே விஜய் படிப்பார். அஞ்சலை அம்மாள், அம்பேத்கர், காமராஜர் போன்ற மிகச்சிறந்த தேசியவாதிகளை தங்களின் கொள்கை தலைவர்களாக அடையாளப்படுத்திவிட்டு, தேசியத்துக்கு தவெக-வில் இடமில்லை என்பது எவ்வளவு பெரிய நகை முரண்.

பிஹார் ஸ்டைலில் பொங்கலுக்கு குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் போனஸ் கொடுக்கப் போகிறதாமே திமுக அரசு?

வெறும் இலவசங்களை மட்டுமே கொடுத்து, மக்களிடம் கவர்ச்சி விளம்பரங்களைக் கூறி அவர்களின் வாக்குகளை ஏமாற்றி நயவஞ்சகமாக பறிக்கும் வேலையைத்தான் திமுக செய்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் கணவர் மாதம் ரூ.10 ஆயிரத்துக்கு குடிக்கிறார். இதற்கு திமுக ரூ.1000-ஐ லஞ்சமாக கொடுக்கிறது.

அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்புக் கொடுப்போம் என்று சொல்லி இருந்தாரே அமித் ஷா... இன்னும் அதற்கான காலம் கனியவில்லையா?

அண்ணாமலைக்கு தேசிய அளவில் மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்படும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. அவர் மாநிலத் தலைவராக இருந்தபோது பரபரப்பாக செயல்பட்டார். இப்போது, அவர் செயல்படாமல் இருப்பது போன்று வெளிப்பார்வைக்குத் தெரியலாம். ஆனால், இப்போதும் அவர் தனக்குத் தரப்பட்ட பொறுப்பில் ஆக்டிவாக செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்.

SCROLL FOR NEXT