பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அம்பேத்கரின் கொள்கைகளுக்கும் லட்சியங்களுக்கும் எதிரான வகையில் பட்டியலின மக்களின் வாழ்வுரிமையை திமுகவிடம் அடமானம் வைத்து அரசியல் செய்யும் திருமாவளவனுக்கு ஆர்.எஸ்.எஸ், பாஜக பற்றி பேச தகுதி இல்லை.
விடுதலை சிறுத்தைகள் கட்சி என்பது மறக்கடிக்கப்பட்டு, தற்போது, விழுப்புரம் சிதம்பரம் கட்சி என்று பட்டியலின மக்களே விமர்சித்து வருகின்றனர்.
இரண்டு சீட்டுகளுக்காக வியாபாரம் பேசி விற்கும் திருமாவளவனுக்கு மற்ற கட்சிகளுக்கும், கட்சியின் தலைவர்களுக்கும் அறிவுரை சொல்லவும் தகுதி இல்லை. பட்டியலின தலைவர்கள் படுகொலை, கழிவு நீரில் மலம் கலக்கப்பட்ட பிரச்சனை முதல் எந்த பிரச்சினைக்கும் வாய் திறக்காமல் திமுகவின் அடிமையாக இருக்கும் திருமாவளவன், விசிகவை கலைத்துவிட்டு திமுகவில் இணைந்து விடுவதே நல்லது.
சீமான், நடிகர் விஜய் இருவரிடமும் திமுகவின் தூண்டுதலின்படி திரை மறைவு பேரத்தில் ஈடுபட்டு திமுகவின் ஊது குழலாக திருமாவளவன் செயல்பட்டு கொண்டிருக்கிறார். கிறிஸ்தவ, இஸ்லாமியர்களை இந்து மக்களிடம் இருந்து பிரித்துமதவெறி அரசியல் செய்து திமுகவை வெற்றி பெற வைக்கும் நாடக அரசியல் எடுபடாது.