

கோவை: “பொங்கலுக்குப் பிறகு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை பார்க்கலாம். அதிமுகவில் இருந்து பலரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருக்கிறார்கள்” என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும், தவெக நிர்வாக ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “ஓபிஎஸ் அனைத்து மாவட்டச் செயலாளர்களுடனும் நடத்திய ஆலோசனையின் படி, எந்த காலகட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்ள போவதில்லை என்று உறுதி அளித்திருக்கிறார். விரைவில் நல்ல முடிவை எடுப்பார்.
இந்த பொங்கலுக்குப் பிறகு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை பார்க்கலாம். பொங்கலுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து பலரும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வர இருக்கிறார்கள். அமமுகவும் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. வரும் 27, 28 மலேசியாவில் தனது படம் தொடர்பான நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்ள இருக்கிறார். அதன் பிறகு எந்தெந்த மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் என்பது அறிவிக்கப்படும். கட்டுப்பாடுகள் தொடர்ந்து அவருக்கு விதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனினும் அதையெல்லாம் தாண்டி மக்களின் மனதில் அவர் நின்று கொண்டிருக்கிறார்.
2026ஆம் ஆண்டு அவர் ஆட்சி பீடத்தில் அமர்வதை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது. கூட்டம் கூட்டுவதற்கு அனைவரும் செலவு செய்கிறார்கள். ஆனால் செலவே செய்யாமல் அவருக்கு கூட்டம் கூடுகிறது. எதிர்கால தமிழகத்தை விஜய் ஆளவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்” இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.