சென்னை: உவமைக் கவிஞர் சுரதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இது குறித்த தமிழக அரசின் செய்திக் குறிப்பு: தமிழக அரசின் சார்பில், உவமைக் கவிஞர் சுரதாவின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன், பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆகியோர் இன்று (நவ.23) சென்னை, அசோக் பில்லர் மாநகராட்சிப் பூங்கா அருகில் அமைந்துள்ள உவமைக் கவிஞர் சுரதாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது திருவுருவப் படத்துக்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
கவிஞர் சுரதா தஞ்சை மாவட்டம் பழையனூர் என்னும் சிற்றூரில் 1921-ம் ஆண்டு நவம்பர் 23-ம் நாள் பிறந்தார். உவமைக் கவிஞர் சுரதாவின் இயற்பெயர் ராசகோபாலன். பாவேந்தர் பாரதிதாசனிடம் கொண்ட தீவிரப் பற்றின் காரணமாக, பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதைத் சுப்புரத்தினதாசன் என மாற்றிக் கொண்டார்.
சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகளை படைத்தார். செய்யுள் மரபு மாறாமல் எழுதி வந்த இவர், உவமைகள் தருவதில் தனிப்புகழையும் பெற்றார். இதனாலேயே இவர் “உவமைக் கவிஞர்” என்று அழைக்கப்பட்டார். இவர் சுய மரியாதை இயக்கத்தின் கருத்துகளைப் பரப்பும் வகையில், நாடகக் குழு ஒன்றினை அமைத்து பெரியார், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ‘புரட்சிக்கவி' நாடகத்தில் நடித்தார்.
1955-ல், உலகிலேயே முதன்முறையாக கவிதை நடையிலேயே ‘காவியம்' என்கிற வார இதழைத் தொடங்கிய பெருமை இவரையே சேரும். மேலும் இலக்கியம், ஊர்வலம், விண் மீன், சுரதா என பல இலக்கிய ஏடுகளையும், இதழ்களையும் தொடங்கிக் கவிதை வளர்ச்சிக்கு பெரிதும் உதவினார்.
உவமைக் கவிஞர் சுரதாவுக்கு, 1969-ம் ஆண்டு தேன்மழை என்கிற கவிதை நூலுக்குத் தமிழ்நாடு அரசின் பரிசு, 1972-ம் ஆண்டு கலைமாமணி விருது, 1990-ம் ஆண்டு கலைத்துறை வித்தகருக்கான ‘பாரதிதாசன் விருது' ஆகியவை வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
2007-ம் ஆண்டு தமிழக அரசால் உவமைக் கவிஞர் சுரதா எழுதிய நூல்கள் அரசுடைமையாக்கப்பட்டன. தமிழ் இலக்கணத்திற்கும் தனிப்பெருந்தொண்டாற்றிய சிறப்புமிக்க உவமைக் கவிஞர் சுரதாவை போற்றும் வகையில், அன்னாரது பிறந்தநாளான நவம்பர் 23-ம் நாள் தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் ராஜாராமன், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.