புதுடெல்லி: தூத்துக்குடி, தெற்கு இலந்தை குளத்தைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் கடந்த 2015-ல் இஸ்லாமிய மதத்துக்கு மாறி தனது பெயரை சமீர் அகமது என மாற்றிக் கொண்டார். இதையடுத்து, தனக்கு ‘முஸ்லிம் லெப்பை’ என சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். ஆனால், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் பரமசிவம், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சாதிச் சான்றிதழ் குறித்து 2024-ல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை, அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது எனக்கூறி அரசாணையை ரத்து செய்ததோடு, அவர் ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம்’ என சாதிச் சான்றிதழ் கோர முடியாது எனவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமார் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன்பு மனு விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பாக, மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தஹி, சித்தார்த் லூத்ரா ஆஜராகி, சமூக, கல்வி ரீதியாக பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள், மதம் மாறினாலும் இட ஒதுக்கீட்டுப்பலன்களைப் பாதுகாத்து அனைவருக்கும் சமமான வாய்ப்பை உருவாக்குவதுமே அரசாணையின் நோக்கம் என தெரிவித்தனர். இதையடுத்து நீதிபதிகள், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.