பிரதிநிதித்துவப் படம்

 
தமிழகம்

மேட்டூர் அருகே ‘பவாரியா’ கும்பல் ஊடுருவல்: பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் அருகே கொளத்தூரில் குற்ற செயல்களில் ஈடுபடவும் வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடும் நோக்கில் ஊடுருவியுள்ள வடமாநில பவாரியா கும்பல் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீஸார் அறிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் 14 கிராம ஊராட்சிகளில் 76 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அதேபோல், மேட்டூர் வனச்சரகத்துக்கு கீழ் பாலமலை, பச்ச பாலமலை பகுதிகளில் சிறுத்தை, மான் குரங்கு, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. கர்நாடக மாநிலத்தை ஒட்டியும் இப்பகுதி உள்ளது.

இதனிடையே, இப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடும் நோக்கத்துடனும், குற்றச் செயல்களில் ஈடுபடவும் வடமாநிலத்தைச் சேர்ந்த பவாரியா கும்பல் ஊடுருவியுள்ளதாகத் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். கிராமம், தோட்டத்து வீடுகள் அல்லது வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் வடமாநிலத்தவர் அல்லது முன்பின் அறிமுகமில்லாத புதிய நபர்கள் தங்கியிருந்தாலோ, நடமாடினாலோ உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்.

வனப்பகுதியில் புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடும் விதமாகச் சந்தேகத்திற்கிடமான நபர்கள் சுற்றித் திரிந்தால் உடனடியாகக் காவல்துறைக்குத் தெரியப்படுத்த வேண்டும் வீடு மற்றும் தோட்டங்களை வாடகைக்கு விடுபவர்கள், வெளிநபர்களின் ஆதார் உள்ளிட்ட சரியான அடையாள ஆவணங்களைச் சரிபார்க்காமல் தங்க அனுமதிக்க வேண்டாம். பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை.

ஆனால், எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சந்தேகத்திற்குரிய நபர்களைக் கண்டால் நீங்களாகவே அணுக வேண்டாம். உடனே கீழ்க்காணும் எண்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். கொளத்தூர் காவல் ஆய்வாளர் மஞ்சுநாதன் 99767-11161, கொளத்தூர் காவல் நிலையம் 94981-00997, தனிப்பிரிவு காவலர் மணிகண்டன் 90805-82107, அவசர உதவிக்கு 100 / 112 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும் என கொளத்தூர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT