தமிழகம்

ஐடிபிஐ வங்கியை அந்நியமாக்கும் முயற்சியை கைவிட கோரி சென்னையில் வங்கி அதிகாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மு.வேல்சங்கர்

சென்னை: ஐடிபிஐ வங்கியை அந்நியமயமாக்கும் முயற்சியை கைவிடக் கோரி, வங்கி அதிகாரிகள் சங்கத்தினர் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் கடந்த அக்.14-ம் தேதி நடைபெற்றது. அக்கூட்டத்தில், ஐடிபிஐ வங்கியின் 60.72 சதவீத பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு விற்கும் முடிவு எடுக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பான 'யுனைடெட் போரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ்' கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தது. மேலும், நாடு தழுவிய அளவில் கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, ஐடிபிஐ வங்கியை அந்நியமயமாக்குவதற்கும், தனியார் மயமாக்குவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட அகில இந்திய ஐடிபிஐ அதிகாரிகள் சங்கத்தினர் நவ.2, 3 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். இதற்கு அகில வங்கி அதிகாரிகள் சங்கம் ஆதரவு தெரிவித்திருந்தது.

அதன்படி, ஐடிபிஐ வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை இன்று தொடங்கினர். நாடு முழுவதும் 20 ஆயிரம் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதன் ஒருபகுதியாக, ஐடிபிஐ வங்கியை அந்நியமயமாக்கும் முயற்சியை கண்டித்து, அகில இந்திய ஐடிபிஐ அதிகாரி, ஊழியர்கள் சென்னை நந்தனத்தில் திங்கள்கிழமை (நவ.2) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.நாகராஜன், அகில இந்திய ஐடிபிஐ அதிகாரிகள் சங்க செயலாளர் பனிந்திர நூலி, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தமிழக பிரிவு பொதுச் செயலாளர் ரோஷன் கார்க்கி, தலைவர் விவேக்ராஜா, துணை பொதுச் செயலாளர் கோபாலகிருஷ்னன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், ஐடிபிஐ வங்கியை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தி பேசினர்.

இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியது: “ஐடிபிஐ வங்கி கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் முறையே ரூ.5,600 கோடி, ரூ.7,500 கோடி மற்றும் ரூ.9,500 கோடி என மொத்தம் ரூ.22,600 கோடியைத் நிகர லாபமாக ஈட்டியுள்ளது. மேலும், பொது மக்களின் ரூ.3,50,000 கோடி வைப்புத்தொகை, இந்த வங்கியில் பாதுகாப்பாக உள்ளது. இத்தகைய சிறப்பான செயல்பாட்டைக் கொண்ட ஒரு பொதுத்துறை வங்கியை அரசு தனியாருக்கு தாராளம் காட்டுகிறது.

ஐடிபிஐ வங்கி தற்போது அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அங்கு புதிய பணியாளர் சேர்க்கை மற்றும் பதவி உயர்வுகளில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கான சமூக நீதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக் கொள்கை முறையாகப் பின்பற்றப்படுகிறது.

ஆனால், இந்த வங்கி ஒருமுறை தனியார் வெளிநாட்டு நிறுவனத்தின் கைக்குச் சென்றால், இந்த இடஒதுக்கீட்டு முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவு சிதையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசின் இந்த தேவையற்ற, ஆபத்தான முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என்று அவர்கள் கூறினர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT