சென்னை: வங்கி மேலாளரை தாக்கிய வழக்கில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அடையாறு காந்தி நகர் பகுதியில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகளான கயல்விழிக்குச் சொந்தமான கட்டிடம் உள்ளது. இதில் வாடகை அடிப்படையில் எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம், கட்டிடத்தில் உள்ள லிஃப்ட் பழுது குறித்து கயல்விழியின் உதவியாளரிடம் எஸ்பிஐ வங்கி மேலாளர் ஹர்ஷீன்சிங் புகார் தெரிவித்துள்ளார்.
ஆனால் பழுதை சரி செய்யாததால் கயல்விழியிடம் வங்கி மேலாளர் நேரடியாகப் புகார் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த கயல்விழி, வங்கி அலுவலகத்துக்கு வந்து வங்கி மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அப்போது வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த கயல்விழி, வங்கி மேலாளர் ஹர்ஷீன்சிங்கை கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து வங்கி மேலாளர், சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கயல்விழி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கில் சாஸ்திரி நகர் போலீஸார் சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை நேற்று தாக்கல் செய்தனர். இதையடுத்து அடுத்தகட்ட விசாரணை டிச.22-ம் தேதி அன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.