சென்னை: வடபழனி முருகன் கோயிலில் உள்ள வள்ளி திருமண மண்டபத்தை புதுப்பி்க்கும் பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீ்ட்டித்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயில் உபரி நிதியைக் கொண்டு திருமண மண்டபங்கள் கட்டவோ அல்லது புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ளவோ கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கடந்தாண்டு ஆக.19 அன்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்தாண்டு ஏப்ரல் முதல் வடபழனி முருகன் கோயிலில் உள்ள வள்ளி திருமண மண்டபத்தை புதுப்பித்தல், புதிதாக ஜெனரேட்டர் அமைத்தல், அறநிலையத் துறை துணை ஆணையர் அலுவலகத்தை சீரமைத்தல் என ரூ. 8.72 கோடிக்கான ஒப்பந்தப் பணிகளை அறநிலையத் துறை மேற்கொண்டு வருவதால் இப்பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறி, தேவா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு கட்டுமானப் பணிகளை தொடரக்கூடாது என இடைக்காலத் தடை விதித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத் துறை தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது.
அதையடுத்து, இதுதொடர்பாக, இரு வாரங்களில் பதிலளிக்க வேண்டுமென அறநிலையத்துறைக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதுவரை, வடபழனி முருகன் கோயிலில் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தும், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.