தமிழகம்

பாலியல் புகார் வழக்கில் கருப்பு முருகானந்தத்துக்கு முன்ஜாமீன் மறுப்பு: மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

செய்திப்பிரிவு

மதுரை: பெண் நிர்வாகி அளித்த பாலியல் புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜக முன்னாள் மாநில நிர்வாகி கருப்பு முருகானந்தம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

பாஜக முன்னாள் மாநில நிர்வாகி கருப்பு முருகானந்தம் மீது, அக்கட்சியின் ஓபிசி பிரிவு முன்னாள் நிர்வாகி திவ்யா சேஷாத்ரி என்பவர் ரங்கம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில், கருப்பு முருகானந்தம் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் கருப்பு முருகானந்தம் மனு தாக்கல் செய்தார். ‘என் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானது. புகார் அளித்த பெண் கணவரைப் பிரிந்து வாழ்ந்துவரும் நிலையில், தனது பாதுகாப்புக்காக கட்சியில் சேர வேண்டும் என்று கூறி, நண்பர் மூலமாக என்னிடம் அறிமுகமானார். அவருக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளேன். என் மீது பொய் புகார் அளித்துள்ளார். வழக்கில் கைதாகாமல் இருக்க எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கே.முரளிசங்கர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ‘‘புகார் அளித்த பெண்ணின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். மனுதாரரை காவலில் எடுத்து விசாரித்தால்தான் உண்மை வெளிவரும். எனவே முன்ஜாமீன் வழங்கக்கூடாது’’ என வாதிடப்பட்டது. வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பை நீதிபதி தள்ளிவைத்திருந்தார்.

இந்நிலையில், கருப்பு முருகானந்தத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். ‘‘வழக்கு தொடர்பாக போலீஸார் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். புகார் அளித்த பெண்ணின் மார்ஃபிங் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT