கே.பி.முனுசாமி, கே.பி.அன்பழகன்

 
தமிழகம்

வேட்பாளர் வரலாறு: கே.பி.முனுசாமி, கே.பி.அன்பழகன் பின்புலம் என்ன?

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி/தருமபுரி: சட்டப்பேரவை தேர்தலை யொட்டி அதிமுக சார்பில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியும், தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனும் போட்டியிடுகின்றனர். அவர்களின் விவரம் வருமாறு:

வேப்பனப்பள்ளி தொகுதி:

முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி (74) வேப்பனப்பள்ளி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த கே.பி.முனுசாமிக்கு மங்கையர்கரசி என்ற மனைவி, சதீஷ்குமார், கார்த்திகேயன் என்கிற 2 மகன்கள், உமா மகேஸ்வரி என்ற மகள் ஆகியோர் உள்ளனர்.

அதிமுகவில் எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர், ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டச் செயலாளர், மாவட்ட அவைத்தலைவர், கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர், அமைப்புச் செயலாளர் பதவிகளை வகித்துள்ளார். தற்போது துணைப் பொதுச்செயலாளராக உள்ளார்.

          

அரசு பதவிகள்:

கே.பி.முனுசாமி 1998-ல் கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தலில் வெற்றி, 2019-ல் கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தலில் தோல்வி, 2020-ல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். சட்டப்பேரவைத் தேர்தலில் காவேரிப்பட்டணம் தொகுதியில் 1991, 2001-ல் வெற்றி, 2006-ல் தோல்வி, கிருஷ்ணகிரி தொகுதியில் 2011-ல் வெற்றி பெற்று உள்ளாட்சித்துறை அமைச்சராக 3 ஆண்டுகள் பதவி வகித்தார்.

பென்னாகரம் தொகுதியில் 2016 -ல் போட்டியிட்டு தோல்வியுற்ற கே.பி.முனுசாமி, வேப்பனப்பள்ளி தொகுதியில் 2021-ல் வெற்றி பெற்றார்.

பாலக்கோடு தொகுதி:

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் (68), தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த கெரகோட அள்ளி கிராமத்தைச் சேர்ந்த அன்பழகனுக்கு மல்லிகா என்ற மனைவி, வித்யா என்ற மகள், சந்திரமோகன், சசிமோகன் என்ற மகன்கள் உள்ளனர்.

அதிமுகவில் 1978 முதல் உறுப்பினராக உள்ள கே.பி.அன்பழகன், பாலக்கோடு தொகுதியில் 2001, 2006, 2011, 2016, 2021 என தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்றார் அதிமுகவில், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலாளர், மாவட்டச் செயலாளர், மாநில அமைப்புச் செயலாளர் என பதவிகளை வகித்தார்.

தமிழக அமைச்சரவையில் 2003- 2006 வரை செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை, 2016 -2021 வரை உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தார். பாலக்கோடு தொகுதியில் 6-வது முறையாக போட்டியிடுகிறார்.

SCROLL FOR NEXT