தமிழகம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இறுதிக்கட்ட பணிகள் தீவிரம் - டிராக்டர்கள், தங்க காசுகள் பரிசு

ஒய்.டேவிட் ராஜா

மதுரை: ஜன. 15-ம் தேதி பொங்கல் பண்டிகை நாளில் நடக்கும் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இறுதிக்கட்ட ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடக்கின்றன. சிறந்த காளை, மாடுபிடி வீரர்களுக்கு டிராக்டர்கள், தங்க காசுகள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிகள் தை மாதம் முழுவதும் மாநிலத்தின் பல பகுதிகளில் நடத்தப்படும். தை முதல் நாளில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும். நிகழாண்டில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 15-ம் தேதி நடைபெறுகிறது.

இதில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பதிவு செய்ய வலைதளம் வழியாக கடந்த 7,8 ஆகிய தேதிகளில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், கடந்த ஆண்டு 2,026 காளைகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு 3,090 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 1,064 காளைகள் அதிகம்.

அதே போன்று, கடந்த ஆண்டில் 1,735 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்த நிலையில் நிகழாண்டு 1,849 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 114 பேர் அதிகம். மேலும் காளைகள், வீரர்களின் தகுதிகளை பரிசீலனை செய்ய வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மருத்துவத் துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் நியமிக்கப்பட்டு, தகுதி வாய்ந்த வீரர்கள், காளைகளுக்கு வலைதளம் மூலம் டோக்கன் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்னேற்பாடு பணிகள் தீவிரம்: ஜல்லிக்கட்டுக்காக அவனியா புரம் - திருப்பரங்குன்றம் சாலை யில் வாடிவாசல் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் 10 அடி முதல் 12 அடி உயர தென்னை மரத்தாலான துாண்கள் மூலம் வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் மேடை, தடுப்புகள் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், கால்நடைகள் பராமரிப்புத் துறை சார்பில் காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெறும் இடம், வாடிவாசல் பின்பகுதியில் காளைகள் வரிசையாகச் செல்ல தடுப்புகள், அவனியாபுரம் பிரிவில் இருந்து பெரியார் நகர் செல்லும் சாலையின் இருபுறமும் பார்வையாளர்கள் நிற்க இரும்புத் தடுப்புகள், காளைகள் பரிசோதனை மையம், மாடுபிடி வீரர்கள் சோதனை மையம் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நேற்று காலை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், மாநகராட்சி ஆணையர் சித்ரா, காவல் ஆணையர் ஜெ.லோகநாதன், எம்எல்ஏ வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

டிராக்டர் பரிசு: அமைச்சர் பி.மூர்த்தி கூறுகையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. போட்டியில் சிறப்பிடம் பெறும் வீரர்கள், காளைகளுக்கு தங்க காசு, அண்டா, கட்டில், பீரோ உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. அதிக காளைகள் பிடிக்கும் வீரர்களை, வருவாய்த் துறையினர் ஒவ்வொரு சுற்று வாரியாக தேர்வு செய்வர்.

இதில் அதிக காளைகளை பிடித்த வீரர் மற்றும் சிறந்த காளையின் உரிமையாளர் ஆகியோருக்கு முதல் பரிசாக கார்கள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது டிராக்டர்கள் வழங்கப்படும் என்றார்.

SCROLL FOR NEXT