பெ.சண்முகம்
பெரம்பலூர்: “நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் தமிழக அரசின் அடக்குமுறையை மாணவர்கள், இளைஞர்கள் தூள் தூளாக்கிவிடுவார்கள்,” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் பாடாலூரை அடுத்த விஜயகோலபுரத்தில் தனியார் டயர் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த டயர் தொழிற்சாலையில் 1200-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த 30 மாதங்களாக ஊதிய உயர்வு வழங்கவில்லை. ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யவில்லை என்று கூறி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், டயர் தொழிற்சாலை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பெ.சண்முகம், “தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன்தான் தவெக ஆட்சி நடந்து வருகிறது. பா.ஜனதா கட்சி தமிழகத்தில் காலூன்றிவிடக்கூடாது என்பதற்காக வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறோம். மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவதாக தெரிந்தால், தவெகவிற்கு அளித்த ஆதரவை மறு பரிசீலனை செய்வோம்.
பெரம்பலூரில் தனியார் டயர் தொழிற்சாலை தொழிலாளர்கள் பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம், மாநில அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான தீர்வு காணவேண்டும். அல்லது மூத்த அமைச்சர்களை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்தப் போராட்டம் தொடர்ந்தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு தொடரும்.
நீட் தேர்வுக்கு எதிராக டெல்லி மற்றும் சென்னையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்ப்பதாக முதல்வர் விஜய் கூறியுள்ளார். அப்படியிருக்கையில் மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சென்னையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தமிழக போலீஸார் நடத்திய தாக்குதல் கண்டனத்துக்குரியது.
சென்னையில் கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய மாணவர்களை போலீஸார் கைது செய்திருப்பது அடக்குமுறையின் உச்சக்கட்டம். நீட் தேர்வை எதிர்ப்பதாக கூறும் முதல்வர், போராட்டத்திற்கு இடம் ஒதுக்கி கொடுத்து ஜனநாயகப் பூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் போராட்டம் நடத்துவதற்கான வாய்ப்பு வழங்கவேண்டும்.
அதைமீறி நீட் தேர்வு எதிரான போராட்டத்தை அடக்குமுறையின் மூலம் ஒடுக்க நினைத்தால் தமிழக அரசின் அடக்குமுறையை மாணவர்கள், இளைஞர்கள் தூள் தூளாக்கிவிடுவார்கள்.
மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டோம். தமிழக முதல்வரும் இந்த நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளார். ” என்றார்.