சென்னை: மக்களால் தோற்கடிக்கப்பட்ட சக்திவாய்ந்தவர்கள் மீண்டும் தலையிட்டு விஜய் முதல்வராக வருவதை தடுக்க முயற்சி செய்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எக்ஸ் சமூக வலைதளத்தில் ட்வீட் செய்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவாகி உள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று தமிழக ஆளுநர் அர்லேகரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார் தவெக தலைவர் விஜய். அது தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பு இதுவரை விவரம் எதையும் வெளியிடவில்லை. இதனால் விஜய் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்பது தள்ளிப்போகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக மாணிக்கம் தாகூர் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: “மக்களால் தோற்கடிக்கப்பட்ட சக்திவாய்ந்தவர்கள் மீண்டும் தலையிட்டு விஜய் முதல்வராக வருவதை தடுக்க முயற்சி செய்கிறார்கள். மக்களின் ஜனநாயக விருப்பத்திற்கு எதிராக இன்னும் எத்தனை தடைகளை உருவாக்கப் போகிறார்கள்?
அதிகாரம் மக்களின் தீர்ப்பை தாமதப்படுத்தலாம்; ஆனால் அதை என்றும் அடக்க முடியாது. மக்களின் உரிமைக்கும் நீதிக்கும் இந்தப் போராட்டம் தொடரும்” என்றார்.
தமிழக வெற்றிக் கழகத்துக்கு காங்கிரஸ் (5), இந்திய கம்யூனிஸ்ட் (2) மற்றும் மார்க்சிஸ்ட் (2) ஆதரவு கடிதத்தை அதிகாரபூர்வமாக வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.