கடம்பாடி ஊராட்சியில் குளக்கரையில் குடிசைகளில் வசித்து வரும் இருளர் குடும்பத்தினர்.
மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி ஊராட்சியில் வசிக்கும்16 இருளர் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட பட்டா நிலத்தை, ஆக்கிரமிப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதால் அந்த நிலத்தில் அவர்களை குடியமர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கழுக்குன்றம் ஒன்றியம், கடம்பாடி ஊராட்சியின் மயானத்துக்கு அருகே உள்ள குளக்கரையில், 16 இருளர் குடும்பத்தினர் மற்றும் 2 ஆதிதிராவிடர் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர்.
மேலும், இவர்களின் குடிசைகள் அமைந்துள்ள நிலப்பகுதி நீர்நிலை பகுதியாக உள்ளதால், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களில் பயன்பெற முடியாத நிலை உள்ளது. மேலும், மின் இணைப்பு இன்றி இருளில் வசித்து வரும் அவலநிலை உள்ளது.
அதனால், மேற்கண்ட இருளர் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என நீண்ட நாட்களாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டது. இதன்பேரில், அதே ஊராட்சியில் ஈசிஆர் சாலையை ஒட்டியுள்ள சுமார் 1.60 சென்ட் கிராம நத்தம் நிலத்தில் பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
இதில், கடந்த ஆண்டு மேற்கண்ட பகுதியில் வசிக்கும் 16 இருளர் குடும்பத்தினருக்கு சர்வே எண் 396-ல் இருந்து 411 வரை பட்டா வழங்கப்பட்டது. அதற்கான, சான்றுகளும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
ஆனால், ஊராட்சியில் வசிக்கும் வசதி படைத்த நபர்கள் கிராம நத்தம் நிலத்தின் சந்தை மதிப்பை கருத்தில் கொண்டு அதை அபகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும், இருளர் மக்களிடம் தங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது சிறிய அளவிலான நிலம் எனக்கூறி அவர்களை அப்பகுதியில் குடியமர்த்துவதை தடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதனால், மாவட்ட ஆட்சியர் அங்கு ஆய்வு செய்து பட்டா வழங்கப்பட்ட நிலத்தில் இருளர் குடும்பத்தினரை குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.