சென்னை: சட்டப்பேரவையில் அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் நேற்று பேசும்போது, ‘8 கோடி மக்களின் பிரதிநிதியாக இருக்கக்கூடிய முதல்வர் விஜய் பேரவைக்குள் வரும்போது, அமர்ந்திருக்கக்கூடிய எதிர்க்கட்சி தலைவர் மரியாதை கொடுக்கச் சொல்ல வேண்டும்’ என்று திமுக உறுப்பினர் ஓபிஎஸ்ஸுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற விவாதம் வருமாறு:
ஓ.பன்னீர்செல்வம்: இந்த சட்டப்பேரவைக்கென சில மரபுகள் உள்ளன. இந்த அவைக்கு பேரவைத் தலைவர்தான் முதன்மையானவர். அவர் வரும்போது மட்டுமே அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நிற்பார்கள்.
மேலும், முதல்வராக இருப்பவர்கள் பேரவையில் நுழைந்தவுடன் நேராக தங்கள் இருக்கைக்குச் சென்று, அங்கிருந்து ஒரு வணக்கம் செலுத்திவிட்டு அமர்வதுதான் மரபாகும்.
தற்போது புதிய மரபாக முதல்வர் வரும்போது எழுந்து நிற்க வேண்டுமெனில், இந்த அவைக்குள் எதிர்க்கட்சித் தலைவர் வரும்போதும் ஆளுங்கட்சியினர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நிற்க வேண்டுமா என்பதை பேரவைத் தலைவர் தான் தீர்மானிக்க வேண்டும்.
பேரவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்: சட்டப்பேரவை கூடும்போது, பேரவைத்தலைவருக்கு உரியமரியாதை அளிக்கப்பட வேண்டும். ஆனால், முதல்வர் விஜய் பேரவை கூடுவதற்கு முன்பாகவே இங்கு வந்துவிட்டால் இருபக்கமும் அவர் வணக்கம் தெரிவிப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
அப்போது முன்னாள் முதல்வர் பழனிசாமி உட்பட பல உறுப்பினர்கள் எழுந்து நிற்பார்கள். அதேநேரம் முதல்வர் அல்லது எதிர்க்கட்சித் தலைவர் வரும்போது, எழுந்து நின்று மரியாதை தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல.
தனிப்பட்ட விருப்பம் ஆனால், கட்சி மாச்சரியங்களை மறந்து ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மரியாதை தெரிவித்துக் கொள்வது என்பது தமிழர்களின் பண்பாடாகும்.
அந்த கண்ணியத்தை அவையில் கடைபிடிப்பதும், மரியாதை கொடுப்பதும் உறுப்பினர்களின் தனிப்பட்ட விருப்பமாகும். எனவே அவர்கள் விருப்பப்படியே செயல்படலாம். இவ்வாறு விவாதம் நடை பெற்றது.