திண்டுக்கல்லில் நடந்த பாஸ்போர்ட் சேவைமைய குறைதீர் கூட்டத்தில் பேசிய எம்.பி. ஆர்.சச்சிதானந்தம்.
திண்டுக்கல்: “சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை மக்களுக்குப் பயனுள்ள வகையில் நடத்த வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து விவாதங்கள் அமைய வேண்டும். அரசியல் போட்டிகளையும் மோதல்களையும் பொதுவெளியில் வைத்துக்கொள்ள வேண்டுமே தவிர, சட்டப்பேரவையை அதற்கான களமாக மாற்றக் கூடாது” என திண்டுக்கல் எம்.பி. ஆர்.சச்சிதானந்தம் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு தபால் நிலையத்தில் செயல்பட்டு வந்த பாஸ்போர்ட் சேவை அலுவலகம் திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்தில் மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதையடுத்து பயனாளிகள் குறைதீர் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் தலைமை தபால் அலுவல முதுநிலை கண்காணிப்பாளர் சீனிவாசராவ் தலைமை வகித்தார். மேலும், தபால் அலுவலக பணியாளர்கள், பாஸ்போர்ட் சேவை மைய அலுவலர்கள், வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு திண்டுக்கல் எம்.பி. ஆர்.சச்சிதானந்தம் பேசினார்.
தொடர்ந்து பேசிய எம்.பி சச்சிதானந்தம் கூறியது: “பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து தேர்வு செய்திருந்தாலும், அங்குள்ள விவசாயிகள் மத்தியில் அதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவியது. பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டு, அதற்கு மாற்றாக மீனம்பாக்கம் விமான நிலைய வளாகத்திலேயே ஐந்தாவது முனையம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என புதிய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், விமானப் போக்குவரத்து பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் இடவசதி உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்து, மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து இதில் உரிய முடிவை எடுக்க வேண்டும். சென்னை நகரின் கூடுதல் தேவையைப் பூர்த்தி செய்ய மற்றொரு முனையம் அமைக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை முன்னிறுத்தி மீனம்பாக்கத்திலேயே கூடுதல் முனையம் கொண்டுவருவதே உகந்ததாக இருக்கும்.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு விமானப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து மற்றும் சாலை இணைப்பு ஆகியவை மிகவும் அத்தியாவசியமானது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலம் தொழிற்பாதைகள், அமைப்பதற்கும், சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும் உரிய முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலம் இரும்பு ஆலையில் இருந்து வரும் இரும்பு மற்றும் சிமெண்ட் உள்ளிட்ட சரக்குகளைக் கேரளாவுக்குக் கொண்டு செல்லும் சரக்கு ரயில்கள், திண்டுக்கல் ரயில் நிலையத்திற்குள் வந்து இன்ஜினை மாற்றிச் செல்வதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகிறது. இதைத் தவிர்க்க குளத்தூர் முதல் அக்கரைப்பட்டி வரை புதிய ரயில் பாதை பணிக்கான வான்வழி சர்வே பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. விவசாய நிலம், குடியிருப்புக்கள் பாதிக்கப்படாமல் இந்தத் திட்டத்தை நிறைவேற்றப்படவுள்ளது.
திண்டுக்கல் ரயில் நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயணிகளுக்கு அனைத்து வசதிகளுடனும் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. கடந்த அரசின் மீது, அரசிடம் உண்மையான ஆவணங்கள் மற்றும் கோப்புகள் இருக்கும் பட்சத்தில் அதன் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டப்பேரவை என்பது மக்களுக்கான இடமாக மாற்றப்பட வேண்டும். நான், நீ என்ற போட்டியை வெளியில் வைத்துக்கொள்ளலாம். எங்கள் பிரச்சினையைப் பேசாமல், உங்கள் பிரச்சினையை பேசுகிறீர்களே என மக்கள் கேட்கும் நிலை வரும்.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை மக்களுக்குப் பயனுள்ள வகையில் நடத்த வேண்டும். தொகுதிப் பிரச்சினைகள், தமிழ்நாட்டின் வளர்ச்சி, விவசாயம் மற்றும் தொழில் மேம்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து விவாதங்கள் அமைய வேண்டும். அரசியல் போட்டிகளையும் மோதல்களையும் பொதுவெளியில் வைத்துக்கொள்ள வேண்டுமே தவிர, சட்டப்பேரவையை அதற்கான களமாக மாற்றக் கூடாது. நேரலையில் நிகழ்வுகளைக் கவனித்து வரும் பொதுமக்கள் மக்கள் பிரச்சினைகளைப் பேசாததற்கு உரிய எதிர்வினையாற்றுவார்கள்” என்று அவர் கூறினார்.