சென்னை: தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டுமென்றும், உயர் நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புரைகள், தீர்ப்பாணைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் தமிழில் வழங்கும் கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்றும் சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், அரசியலமைப்புச் சட்ட Article 348(2) மற்றும் ஆட்சி மொழிகள் சட்டம், 1963, பிரிவு 7 ஆகியவற்றின் கீழ் மாநில ஆளுநரால் அனுப்பப்படும் முன்மொழிவுகளின் மீது தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தி அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் விஜய் உரையாற்றினார்.
தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் விஜய் பேசுகையில், “சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை மொழியாக தமிழை அங்கீகரிக்க வேண்டும். உயிரோடும் உணர்வோடும் ஒன்றிணைந்தது எனக் கருதுகிறோம்; சிறப்புமிக்க தமிழ் மொழியானது ஆட்சி, கல்வி, மாவட்ட நீதிமன்றங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்திலும் தமிழை முதன்மை மொழியாக அறிவிப்பது காலத்தின் கட்டாயம்; மாநிலத்தின் ஆட்சி மொழியை உயர் நீதிமன்ற நடவடிக்கையில் பயன்படுத்த அதிகாரம் வழங்க முடியும்.
நீதிமன்ற தீர்ப்பு மற்றும் உத்தரவுகள் அனைத்தையும் தமிழில் வழங்கும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். தமிழில் மனுக்கள், ஆவணங்களை சமர்பிக்க உரிய நடைமுறை உருவாக்கப்பட வேண்டும்.
நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்களுக்கு சட்டத் தமிழ் மற்றும் மொழிபெயர்ப்பு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக உள்ளது. வழக்கு தொடர்பான வாதங்கள் தமிழில் இருந்தால் எளிதாக புரியும். இந்த கோரிக்கை எந்த மொழிக்கும் எதிரானது அல்ல.
தமிழ் மொழிக்கான சட்ட அங்கீகாரம் கேட்கும் கோரிக்கை. குடியரசுத் தலைவரும், மத்திய அரசும் இதற்கு ஒப்புதல் தர வேண்டும். இப்பேரவை ஒருமனதாக இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக பயன்படுத்துவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
இந்தத் தீர்மானம் மீது பல்வேறு கட்சி உறுப்பினர்களும் உரையாற்றிய பின்னர் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.