உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ள அஸ்ரா கார்க்.
சென்னை: தமிழக காவல் துறையின் உளவுத்துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தவெக தலைவர் விஜய் முதல்வராக கடந்த 10-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதையடுத்து ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.
முதல் கட்டமாக, காவல் துறை வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த அஸ்ரா கார்க் உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறை செயலர் கே.மணிவாசன் நேற்று பிறப்பித்தார்.
முன்னதாக தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு உளவுத்துறை ஐஜி.யாக அவினாஷ் குமார் நியமனம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நேர்மை மற்றும் கண்டிப்புக்கு பெயர் பெற்ற அஸ்ரா கார்க், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சேர்ந்தவர்.
2004-ல் நேரடி ஐபிஎஸ் ஆக தேர்வான இவர் தமிழகப் பிரிவு அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார். பி.இ. பட்டம் பெற்றுள்ள அஸ்ரா கார்க் தமிழ், பஞ்சாபி, இந்தி, ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவர்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உதவி எஸ்.பி.யாக பணியைத் தொடங்கி நெல்லை, மதுரை, தருமபுரி மாவட்ட எஸ்பியாக பணியாற்றி மக்களுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். பின்னர் பதவி உயர்வு பெற்று டெல்லி சிபிஐயில் பணியாற்றினார்.
அதைத் தொடர்ந்து மீண்டும் தமிழகம் திரும்பிய அவர் தென்மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். பின்னர் வட சென்னை காவல் கூடுதல் ஆணையராகப் பணியாற்றினார்.
அதைத் தொடர்ந்து வடக்கு மண்டல ஐ.ஜி.யாக பணியாற்றிய நிலையில் தற்போது உளவுத்துறை ஐ.ஜி. ஆகியுள்ளார். தென் மண்டல ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் பணியாற்றியபோது போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோதக் கடத்தலை ஒழிப்பதில் தீவிரம் காட்டினார்.
இந்த சீரிய பணியை அங்கீகரித்து தமிழக அரசு 2023-ம் ஆண்டு சுதந்திர தின விழாவில் அவருக்கு சிறப்புப் பதக்கம் வழங்கி கவுரவித்தது. கரூரில் விஜய் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், அதுபற்றி விசாரிக்க அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சிபிஐ விசாரணையைக் கோரியது தவெக. தற்போது தவெக அரசு பதவியேற்ற நிலையில் அஸ்ரா கார்க் உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம், ஐ.ஜி.யாக செந்தில்வேலன் நீண்ட காலம் பணியாற்றினர். இவர்களுடன் டிஐஜி, எஸ்.பி.க்களும் பணியாற்றினர்.
தேர்தல் நெருங்கிய நேரத்தில் டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு முழுப் பொறுப்பையும், பிற அதிகாரிகளுடன் ஐஜி செந்தில்வேலன் கவனித்தார். இதையடுத்து, இப்பிரிவுக்கு டிஜிபியாக பாலநாகதேவி சமீபத்தில் நியமிக்கப்பட்டு பணியில் உள்ளார்.
தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னர் செந்தில்வேலன் மாற்றப்பட்டு ஐ.ஜி.யாக அவினாஷ் குமாரை தேர்தல் ஆணையம் நியமித்தது. இந்நிலையில்தான் அவினாஷ் குமார் மாற்றப்பட்டு அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.