சென்னை: அருப்புக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விநாயகர் விசர்ஜன ஊர்வலத்துக்குள் புகுந்து தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்த இஸ்லாமிய அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை, இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 15.09.2026 அன்று மாலை இந்து முன்னணி சார்பில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது. வழக்கம்போல மசூதி அருகில் மேளம் அடிக்கக் கூடாது என்ற காவல்துறையின் நிபந்தனை ஏற்கப்பட்டு அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. விநாயகர் ஊர்வலத்தில் ஓம் கணேசா... ஜெய் கணேசா... பாரத் மாதா கி ஜே... போன்ற கோஷங்களோடு ஊர்வலம் சென்றது.
அப்போது இஸ்லாமிய அமைப்பைச் சார்ந்த ஐந்து பேர் திடீரென்று விநாயகர் ஊர்வலத்துக்குள் அத்துமீறி நுழைந்து, விநாயகர் சதுர்த்தி விழா நிர்வாகிகளை அடிக்கப் பாய்ந்து தகராறு செய்தனர். மேலும், ஊர்வலத்தில் வந்த விநாயகர் கமிட்டி பொறுப்பாளர் சிவசாமி என்பவரை பார்த்து உன்னை வெட்டி கொன்று விடுவேன் என பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்வதற்கு பதில் அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து செல்ல கெஞ்சினர்.
விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தின் உள்ளே புகுந்த இஸ்லாமிய அமைப்பைச் சார்ந்தவர்கள், மதமோதலை உருவாக்கும் வகையிலும், மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டுள்ளனர்.
காவல்துறை முன்னிலையிலேயே இத்தகைய சம்பவம் அரங்கேறியுள்ள நிலையில், அவர்களை காவல்துறை கைது செய்யாதது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது.
ஒட்டுமொத்த நிகழ்வும் வீடியோ காட்சியாக சமூக வலைதளங்களில் வெளிவந்தும் தமிழக காவல்துறை அமைதி காக்கிறது.
அருப்புக்கோட்டையில் நடைபெற்ற இந்த சம்பவத்தை இந்து முன்னணி பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது. இதேநிலை தொடர்ந்தால் இஸ்லாமிய பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கும் அபாயம் உருவாகும் என்று எச்சரிக்கிறோம்.
இது குறித்து தேசிய புலனாய்வு முகமை மற்றும் மாநில உளவுத்துறை முழுமையான விசாரணை நடத்தி சதிகளை முறியடிக்க முனைப்புடன் செயல்பட வேண்டும்.
தமிழக அரசும், காவல்துறை உயர்அதிகாரிகளும் இதில் தலையிட்டு பிரச்சினை ஏற்படுத்திய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்.
தமிழகத்தில் நடக்க இருக்கிற விநாயகர் விசர்ஜன ஊர்வலத்திற்கு தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.