சென்னை: திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின்போது, முதல்வருக்கு “அரோகரா”, அமைச்சருக்கு "அரோகரா" என முழக்கம் எழுப்பியதற்கு தலைவர்கள் மற்றும் கட்சிகள் சார்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை: “நேற்று, திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின்போது, இந்து சமய அறநிலையத்துறை குழு உறுப்பினரான வேல்முருகன், தமிழக முதல்வருக்கு “அரோகரா”, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு "அரோகரா" என முழக்கமிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
முருகப்பெருமானின் திருவிழாவையும், பக்தி முழக்கங்களையும் அரசியல் புகழ்ச்சிக்குப் பயன்படுத்துவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.
“அரோகரா” என்பது முருகப்பெருமானை போற்றிப் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் எழுப்பும் புனிதமான முழக்கம். அந்த இறை முழக்கத்தை அரசியல் தலைவர்களுக்காகப் பயன்படுத்துவது ஆன்மிக மரபுகளைக் கொச்சைப்படுத்துவதுடன், முருகப்பெருமானை வழிபடும் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் செயலாகும்.
இந்து சமய அறநிலையத்துறையின் குழு உறுப்பினராக இருப்பவரே இத்தகைய செயலில் ஈடுபடுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பக்தர்களின் நம்பிக்கையையும் வழிபாட்டு மரபுகளையும் அவமதிக்கும் வகையிலான இதுபோன்ற செயல்களைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு தமிழக முதல்வர் விஜய் அறிவுறுத்த வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: “தமிழ்க் கடவுளான முருகப்பெருமானை அவமதிக்கும் விதமாக, கடவுளுக்கு இணையாக முதல்வரையும் அறநிலையத்துறை அமைச்சரையும் துதி பாடிய வர்ணனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று நடைபெற்ற சூரசம்ஹார விழாவின்போது, முருகப் பெருமானுடன் தமிழக முதல்வருக்கும், அமைச்சருக்கும் அரோகரா முழக்கமிட்ட இயல் இசை நாடக மன்றத் தலைவர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அறங்காவலர் தேர்வுக்குழு உறுப்பினரும் பாடகருமான வேல்முருகன் ஆகியோரின் செயல் பக்தர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முருகப்பெருமானின் வீரத்தையும் அருளையும் போற்றிப் பாட வேண்டிய புனிதமான இடத்தில், தங்களுக்குப் பதவி வழங்கிய ஆட்சியாளர்களிடம் விசுவாசத்தைக் காட்டுவதற்காக, கடவுளுக்கு இணையாகத் தமிழக முதல்வரையும் அமைச்சரையும் ஒப்பிட்டுத் துதி பாடுவதற்கு இவர்களுக்கு யார் அனுமதி வழங்கியது? பதவி தந்த ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக முருகப்பெருமானின் புனிதத்தையும், லட்சக்கணக்கான பக்தர்களின் இறை நம்பிக்கையையும் பலிகொடுப்பதா?.
சாதி, மதம், அரசியல் கட்சி, ஆட்சி அதிகாரம் ஆகிய அனைத்தையும் கடந்து நடைபெறும் புனிதமான நிகழ்வைத் தனிநபர் புகழ்ச்சிக்கும் அரசியல் ஆதாயத்திற்கும் பயன்படுத்தியிருப்பது, தாங்கள் படும் துன்பங்களிலிருந்து விடுபடக் கடுமையாக விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட வந்திருந்த பக்தர்களின் நம்பிக்கையை ஏளனப்படுத்தி, அவர்களை அவமதிக்கும் செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது.
எனவே, திருக்கோயில்களின் ஆன்மிகப் புனிதத்தையும் வழிபாட்டு மரபுகளையும் பாதுகாக்கத் தவறிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மீதும், சம்பந்தப்பட்ட வர்ணனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு இனிவரும் காலங்களில் இதுபோன்ற புனிதமான நிகழ்வுகளில் அரசியல் சார்ந்த தனிநபர் புகழ்ச்சிகளுக்கு எவ்விதத்திலும் இடமளிக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறையையும் தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்.” என்று கூறியுள்ளார்.
திமுக சார்பில் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “திருச்செந்தூர் முருகன் திருக்கோயில் சூரசம்ஹார நிகழ்வை முதல்வருக்கும் அமைச்சருக்கும் அரோகாரா கோஷம் போடப் பயன்படுத்தியது இதுவரை தமிழ்நாடு கண்டிராத மலிவான அரசியல். முதல்வர் விஜய் இந்தத் தவறுக்குப் பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மீதும் ஆணையர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று வலியுறுத்தப்பட்டது.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நேற்று நடைபெற்ற கந்தசஷ்டி சூரசம்ஹார விழா நிகழ்ச்சியில், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் புஷ்பவனம் குப்புசாமியும், இந்து சமய அறநிலையத்துறையின் அறங்காவலர் தேர்வுக் குழு உறுப்பினர் வேல்முருகனும், முருகப்பெருமானுக்கு பக்தர்கள் எழுப்ப வேண்டிய "அரோகரா" கோஷத்தை தமிழக முதல்வருக்கும், அமைச்சருக்கும் எழுப்பியது கடும் கண்டனத்திற்குரியது.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் அரசியல் தலைவர்களின் புகழ்பாடும் மேடைகள் அல்ல. அவை கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கைக்கும், வழிபாட்டு உரிமைக்கும் அடையாளமாகத் திகழ்பவை. கோயில் நிகழ்ச்சிகளில் அரசியல் தலையீடோ, தனிநபர் துதி பாடல்களோ ஒருபோதும் அனுமதிக்கப்படக் கூடாது.
தங்களுக்கு முதல்வர், புதியதாக பொறுப்பு வழங்கி உள்ளார் என்பதற்காக முதல்வரின் மனதை குளிர வைக்கும் நோக்கில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்களா என்ற எண்ணம் பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது. உங்களுக்கு பதவி வழங்கியதற்காக நீங்கள் தனிப்பட்ட முறையில் முதல்வரை வாழ்த்தலாமே அன்றி இதுபோன்று கடவுளோடு ஒப்பிடுவது மிகவும் கண்டனத்திற்குரியது.
எனவே, இந்தச் சம்பவத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசினை இந்து முன்னணி வலியுறுத்துகிறது. மேலும், இனிவரும் காலங்களில் கோயில் திருவிழாக்கள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளில் அரசியல் புகழ்ச்சிகளுக்கு இடமளிக்கக் கூடாது என்பதை இந்து சமய அறநிலையத்துறை உறுதிப்படுத்த வேண்டும் என்பதையும் இந்து முன்னணி வலியுறுத்துகிறது.” என்று கூறினார்.
பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர்: தமிழக முதல்வருக்கு அரோகரா என்று திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தில் கோஷம் போட்டு இந்து மக்கள் மனதை புண்படுத்தியதற்காக தார்மீக பொறுப்பேற்று தமிழக மக்களிடம் விஜய் வருத்தம் தெரிவிக்க வேண்டும். அறநிலையத்துறை அமைச்சர் அதிகார வரம்பு மீறி தனக்கும் சேர்த்து கோஷம் போட்டுக் கொண்டதற்காக உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
இந்த இரண்டையும் முதல்வர் விஜய்யுடைய அரசு உடனடியாக செய்ய பாஜக வலியுறுத்துகிறது. இந்து மக்கள் மனதை புண்படுத்தியமைக்காக முதல்வர் விஜய்யையும் அமைச்சர் ரமேஷும் பாஜக வன்மையாக கண்டிக்கிறது.