

குறியீட்டுப் படம்
சென்னை: தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர்.
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: “இந்தியப் பத்திரிகை கவுன்சில் செயல்படத் தொடங்கியதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் தேசிய பத்திரிகை நாளாகக் கொண்டாடப்படும் இந்நாளில், அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகைத் துறையானது, சமூகப் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து, மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு மக்களாட்சியின் மாண்புகளைக் காக்கும் பணிகளையும் செம்மையாக மேற்கொண்டு வருகிறது.
உண்மை, நேர்மை, நடுநிலை, நம்பகத் தன்மை மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வரும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் என்றும் துணை நிற்போம்” என்று கூறியுள்ளார்.
முன்னாள் முதலவர் மு.க.ஸ்டாலின்: “பொதுப்புத்தி மனப்பான்மையில் இருந்தோ சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலோ கண்மூடித்தனமான கருத்துருவாக்கம் செய்ய முயல்வது அல்ல பத்திரிகையாளரின் பணி!
சமூகத்தின் சிந்தனைப் போக்கே சீரழியும் நிலையிலும் அதனைச் செதுக்கி, பக்குவப்படுத்தும் பெரும் பணிதான் ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடகத்துறையின் பணி. அதனாலேயே, மற்ற மூன்று தூண்களைவிடவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஊடகங்களின் பணி கருதப்படுகிறது.
நேர்மையும், அஞ்சாமையும், உண்மையைக் கண்டறியும் ஆர்வமும் உழைப்பும் பொறுமையும் கொண்டு கடமையாற்றிடும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தேசிய பத்திரிகை தின வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன்: “நாடு முழுவதும் மாநில வாரியாக உள்நாட்டு செய்திகளையும், வெளிநாட்டு செய்திகளையும் மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் கொண்டு சேர்க்கும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளின் பணி இன்றியமையாதது. செய்திகளைத் துல்லியமாகவும், நடுநிலையுடனும் மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதிலும், அதிகாரத்தில் இருப்பவர்களைக் கேள்விக்குட்படுத்துவதிலும் பத்திரிகையாளர்களின் பங்கு முன்னிலைப்படுகிறது.
கல்வி, விவசாயம், அறிவியல், விஞ்ஞானம், விளையாட்டு, தொழில், அரசியல் போன்றவற்றையும் மற்றும் செய்திகளையும் வெளிப்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிருபர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், புகைப்படக் கலைஞர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பத்திரிகை சார்ந்த அனைவரது பணியும் சிறப்புக்குரியது.
ஜனநாயக நாட்டில் சுதந்திரமாக கடமை உணர்ச்சியோடு நான்காவது தூணாக பத்திரிகை மற்றும் ஊடகத்தை செயல்படுத்தும் பத்திரிகையாளர்களின் பங்கும், பணியும், சேவையும் போற்றுதலுக்குரியது. நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பிற்கு பத்திரிகையாளர்கள் ஆற்றும் பணி அர்ப்பணிப்பானது. தேசிய பத்திரிகை தினத்தை ஒட்டி பத்திரிகைகள், ஊடகங்கள் மக்களுக்கும், நாட்டுக்கும் பேருதவியாக அமைய, பத்திரிகையாளர்களின் பணி சிறக்க தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: “ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கி, உண்மையின் குரலாக ஒலித்து, நாட்டு மக்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் உடனுக்குடன் உலகறியச் செய்யும் உன்னதமான பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் எனது தேசிய பத்திரிகையாளர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அச்சுறுத்தல்களுக்கும், அடக்குமுறைகளுக்கும், நெருக்கடிகளுக்கும் அடிபணியாமல், உண்மையையும் நேர்மையையும் மட்டுமே தங்களின் அடையாளமாகக் கொண்டு களத்தில் நிற்கும் ஒவ்வொரு பத்திரிகையாளரின் மக்கள் நலன் காக்கும் மகத்தான பணியையும், அர்ப்பணிப்பு உணர்வையும் இந்நாளில் போற்றிடுவோம்.” என கூறினார்.