சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. இதில் களரி, ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற சாகசங்கள் மற்றும் தீவிரவாத முகாம்களை அழிப்பது போன்ற செயல் விளக்கத்தை வீரர்கள் நிகழ்த்திக் காட்டினர். படங்கள்: எம்.முத்துகணேஷ்
சென்னை: சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த ராணுவ அதிகாரிகளின் வீரதீர சாகச நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் (ஓடிஏ), குறுகிய கால சேவை ஆணையம் (எஸ்எஸ்சி) உள்ளிட்ட பிரிவுகளுக்கான அதிகாரிகளுக்கு பயிற்சி நிறைவு விழா அணிவகுப்பு நடைபெறவுள்ளது.
முன்னதாக, சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் ஏ.ஜே.பெர்னாண்டஸ் முன்னிலையில் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் பயிற்சியை முடித்து ராணுவ அதிகாரிகளாக பொறுப்பேற்கக் காத்திருக்கும் பயிற்சி அதிகாரிகள், தங்களின் கடினப் பயிற்சியின் வெளிப்பாடாகப் பல்வேறு சாகசங்களை செய்து காட்டினர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில், ராணுவ வீரர்களின் அடிப்படை பலமான உடல் தகுதி திறன்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து, இந்திய ராணுவத்தின் பிரத்யேக தற்காப்பு கலை முறையான ‘அமர்’ மூலம் ஆயுதங்கள் இன்றி எதிரிகளை எதிர்கொள்ளும் நுணுக்கங்களை அதிகாரிகள் நிகழ்த்திக் காட்டினர்.
குதிரையேற்ற வீரர்களின் லாவகமான செயல்பாடுகளும், குதிரைக்கும் வீரருக்கும் இடையிலான ஒருங்கிணைந்த சாகசங்களும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின. கேரளாவின் பாரம்பரிய தற்காப்பு கலையான களரிப்பயற்று, அதன் தாள லயத்துடன் கூடிய உடல் அசைவுகளால் அனைவரையும் கட்டிப்போட்டது.
நிகழ்ச்சியின் இறுதிப் பகுதியாக, போர்க்களத்தில் எதிரிகளின் பதுங்கு குழிகளை தகர்க்கும் ‘பங்கர் பஸ்டிங்’ ஒத்திகை நிகழ்த்தப்பட்டது. இது அதிகாரிகளின் ஆவேசமான தாக்குதல், போர்த்திறனை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது. நிகழ்ச்சியின் இறுதியில், சாகசங்களில் ஈடுபட்ட அதிகாரிகளை லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் ஏ.ஜே. பெர்னாண்டஸ் பாராட்டினார்.