சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கி உள்ளது.
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், சென்னையில் 2024 ஜூலை 5-ம் தேதி இரவு படுகொலை செய்யப்பட்டார். சென்னை செம்பியம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் 30 பேர் மீது 7,411 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. முக்கிய குற்றவாளிகளான திருவேங்கடம், சீசிங் ராஜா ஆகிய இருவரும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.
தமிழக காவல் துறையின் விசாரணையில் திருப்தி இல்லாததால், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் இமானுவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, காவல் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்த நீதிமன்றம், 2025 செப்.24-ம் தேதி வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 22-ம் தேதி தள்ளுபடி செய்து, சிபிஐ விசாரணையை உறுதி செய்தது.
இதைத் தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் மீது 5 பிரிவுகளின்கீழ் சிபிஐ தற்போது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளது. செம்பியம் காவல் நிலைய ஆவணங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், சிபிஐ இந்த வழக்கை மறுபதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.
விசாரணை அதிகாரியாக சிபிஐ கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆர்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கு சிபிஐ வசம் சென்றுள்ளதால், கொலைக்கான உண்மையான காரணங்கள், சதித் திட்டங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.