சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், அவரது மனைவியை தொடர்ந்து, சம்பவத்தை நேரில் பார்த்த சகோதரர் வீரமணி உள்ளிட்ட இருவரிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024 ஜூலை 5-ம் தேதி, சென்னை பெரம்பூரில் உள்ள தனது வீட்டுக்கு அருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக செம்பியம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்தனர்.
எனினும், இக்கொலையின் பின்னணியில் உள்ள சதித் திட்டத்தை முழுமையாக வெளிக்கொண்டுவர, வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மற்றும் அவரது குடும்பத்தினர் முறையிட்டனர்.
இதன்பேரில் நீதிமன்றம் இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி சிபிஐ புதிய வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
அதன் தொடர்ச்சியாக, கொலை நிகழ்ந்த இடத்துக்கு நேரில் சென்ற சிபிஐ அதிகாரிகள், சம்பவ இடத்தை ஆய்வு செய்து புகைப்படங்களை சேகரித்தனர். விசாரணையின் அடுத்தகட்டமாக, ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் சுமார் 2 மணி
நேரம் விசாரணை நடத்தினர். அப்போது, வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை வழங்கிய பொற்கொடி, சில யூடியூபர்கள் இக்கொலை குறித்து தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் தாக்கப்பட்ட போது அவரை காப்பாற்ற முயன்று காயமடைந்த அவரது சகோதரர் வீரமணி, சம்பவத்தை நேரில் பார்த்த கீணோஸ் ஆகிய இருவரிடமும் சிபிஐ அதிகாரிகள் நேற்று தீவிர விசாரணை மேற்கொண்டு அவர்களின் வாக்கு மூலத்தை பதிவு செய்தனர்.
தற்போது சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், அடுத்தகட்டமாக இவ்வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நபர்களைத் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் கொலையின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்கள் மற்றும் சதித்திட்டங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.