பாஜக-வின் தேர்தல் அறிக்கை குழு உறுப்பினராக இருக்கும் இரா. அர்ஜுனமூர்த்தி, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தின் இணை அமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். சமூக சேவைகளை ஒருங்கிணைக்கும் வகையில் தமிழக பாஜக தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவின் மாநில அமைப்பாளராகவும் இருக்கும் அவரிடம் ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக பேசினோம்.
திமுக தனது ‘திராவிட மாடல்’ ஆட்சியையும், ‘ஸ்டாலின் 2.0’ என்ற புதிய முன்னெடுப்பையும் வலிமையாக முன்னிறுத்துவது பற்றி..?
திமுக தன்னை ஒரு வலிமையான சக்தியாகக் காட்டிக் கொண்டாலும், அவர்களிடம் ‘திராவிட மாடல்’ என்ற ஒற்றை வெற்று முழக்கத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. முதல்வர் ஸ்டாலின் இப்போதுதான் ‘2.0’ என்று பேசத் தொடங்கியிருக்கிறார். இது முழுக்க முழுக்க பிரதமர் மோடியின் பாணியைப் பார்த்துச் செய்யப்படும் ஒரு ‘காப்பி கேட்’ அரசியல்.
மோடியின் ஒவ்வொரு செயல்பாட்டையும், வார்த்தையையும் இரவல் வாங்கி செயல்படும் ஒருவரை மக்கள் எப்படி திறன்மிக்கத் தலைவராக ஏற்றுக் கொள்வார்கள்? திமுக வெறும் நுங்கு வண்டியை ஓட்டிக்கொண்டு, அதுதான் அதிவேக வாகனம் என மக்களை நம்ப வைக்கத் துடிக்கிறது.
எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றிய மன நிறைவுடன் இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறாரே?
ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவர், “நான் மிகச் சிறப்பாகப் பணியாற்றுகிறேன்” என்று தம்பட்டம் அடித்துக் கொள்வது வெறும் மனோபாவம் சார்ந்த விஷயம் மட்டுமே. அது ஒருபோதும் அவரது திறமைக்கான அத்தாட்சி ஆகாது.
‘ஆட்சியில் பங்கு’ என்ற முழக்கம் தமிழகத்தில் தற்போது சத்தமாக ஒலிப்பது பற்றி..?
இன்றைய காலச் சுழற்சியில் மக்களுக்கு என்ன தேவையோ, அதை அனுசரித்துச் செல்வதற்கு அரசியல்வாதிகள் தயாராகி விட்டார்கள். ஆட்சியில் பங்கு என்பது காலத்தின் தேவையாக இருந்தால், எல்லா அரசியல்வாதிகளும் அதற்கு ஒப்புக்கொண்டு செல்வார்கள். இது திமுக-வுக்கும் பொருந்தும் என்டிஏ-வுக்கும் பொருந்தும்.
ரஜினிகாந்தின் “சிஸ்டம் சரி இல்லை, அதை மாற்ற வேண்டும்” என்ற கருத்தை இப்போது விஜய் கையில் எடுத்திருப்பதாக கருதுகிறீர்களா?
விஜய் முதலில் சிஸ்டத்தை பற்றி புரிந்திருக்கிறாரா? ‘சிஸ்டம் சரியில்லை’ என்று ரஜினிகாந்த் சொன்னபோது, அதற்குப் பின்னால் நாற்பது ஆண்டுகால அவருக்கு நெருக்கமான அரசியல் உணர்வும், உறவும் இருந்தது. விஜய்க்கு அரசியல் உறவு இருந்திருந்தால், அவரது அரசியல் உணர்வுகள் தூண்டப்பட்டிருக்கும். விஜய்க்கு இருப்பது அரசியல் ஆர்வம் மட்டுமே. அது உணர்வாக மாற காலம் எடுக்கும்.
திமுக-வை தீய சக்தி என்றும் அதிமுக-வை ஊழல் சக்தி என்றும் சொல்கிறாரே விஜய்?
எந்தக் கதவில் முட்டினால் சீக்கிரம் திறக்குமோ அதை முட்டுவது தான் மனிதனின் இயல்பு. ஒரு பக்கம், தீய சக்தி என்ற கதவை விஜய் முட்டுகிறார். இன்னொரு பக்கம், ஊழல் சக்தி என்று மற்றொரு கதவை முட்டுகிறார். உண்மையில், எந்தக் கதவை திறந்து மக்களிடம் போகப் போகிறார் என்பதை விஜய் தான் தீர்மானிக்க வேண்டும். தமிழக அரசியல் நீண்டகாலமாக ‘பகுத்தறிவு’ என்ற ஒரு மாயைக்குள் சிக்கிக் கிடந்தது.
ஆனால், இன்று மக்கள் அந்தப் பழைய மாயைத் திரைகளைக் கிழித்தெறிந்துவிட்டு, ‘பொது அறிவு’ என்கிற தெளிவான தளத்துக்கு வந்துவிட்டார்கள். இன்றைய இளைஞர்களும் பொதுமக்களும் வெறும் மேடைப் பேச்சுகளைக் கண்டு ஏமாறத் தயாராக இல்லை. அவர்களிடம் ‘வாய் ஜாலங்கள்’ இனி எடுபடாது.
தேமுதிக-வையும் ராமதாஸையும் என்டிஏ-வுக்குள் கொண்டுவர ஏதேனும் முயற்சிகள் நடக்கிறதா?
தமிழக தேர்தல் களம் திமுக-வுக்கும் என்டிஏ-வுக்கும் இடையிலான நேரடிப் போட்டி என்பதை மக்கள் எப்போதோ முடிவு செய்து விட்டார்கள். என்டிஏ பக்கம் இணையும் கூட்டணிக் கட்சிகளுக்கே லாபமும் அதிகம்; வெற்றியும் அதிகம். தங்கள் கட்சி அதிக இடங்களில் போட்டியிட வேண்டும், தங்கள் தொண்டர்கள் அதிக அளவில் சட்டப்பேரவைக்குச் செல்ல வேண்டும் என்று உண்மையாகவே ஆசைப்படும் எந்தவொரு தலைவரும் இன்று என்டிஏ-வைத்தான் ஆதரிப்பார்கள்.
ஆட்சியில் பங்கு என்று சொல்லி கூட்டணிக் கதவுகளை திறந்து வைத்த விஜய்யுடன் யாரும் கூட்டணி பேசவில்லையே..?
‘ஆழம் தெரியாமல் காலை விடாதே’ என்று ஒரு பழமொழி உண்டு. தற்போது எல்லோரும் ஆழம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பாஜக-வின் தேர்தல் அறிக்கை எதை மையப்படுத்தி தயாராகிறது?
பாஜக தேர்தல் அறிக்கையானது விவசாயிகள், எதிர்காலத் தூண்களான ஜென்-ஸீ இளைஞர்கள் மற்றும் மகளிர் முன்னேற்றத்தை மையப்படுத்தியே தயாராகும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்தபோது, நான் ஒரு சிறிய கட்சியைத் தொடங்கி மக்களுக்கான எனது பணிகளைத் தொடர்ந்தேன். அப்போது நான் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இருந்த பல முக்கிய அம்சங்களை திமுக அப்படியே காப்பி அடித்து தனது தேர்தல் அறிக்கையாக மாற்றியது. இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.
குறிப்பாக, இன்று திமுக அரசு மிகப்பெருமையாகப் பேசிக்கொள்ளும் ‘மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம்’ திட்டம், எனது தேர்தல் அறிக்கையில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு ஐடியா. என்னுடைய சிந்தனையை இரவல் வாங்கித்தான், இன்று அவர்கள் ‘விடியல் பயணம்’ என்று பெயர் சூட்டி விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள்.
தமிழகத்தில் நிலவும் நான்கு முனை போட்டியால் வாக்குகள் பிரிவது யாருக்குச் சாதகமாகும்?
திமுக எப்போதுமே கூட்டணி பலத்தாலும் இலவசத் திட்டங்களாலுமே வெற்றியை தக்கவைத்துக் கொள்கிறது. ஆனால், இம்முறை நிலைமை வேறாக இருக்கிறது. திமுக வெற்றிக்கு காரணமாக இருக்கக் கூடிய 12 சதவீத புதிய வாக்காளர்கள், விஜய், சீமான் மற்றும் என்டிஏ கூட்டணி எனத் தங்களின் விருப்பங்களை மாற்றிக் கொள்ளத் தயாராகிவிட்டார்கள்.
தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு மிகப்பெரிய வாக்கு மாற்றத்தை இந்தத் தேர்தல் சந்திக்கப் போகிறது. இந்த வாக்குகள் பிரியும் போது, அது நேரடியாக திமுக-வின் வெற்றி வாய்ப்புகளைத்தான் பாதிக்கும். அதேசமயம் என்டிஏ வாக்குகள் சிதறாமல் கிடைக்கும். இது என்டிஏ-வுக்கு மிகப்பெரிய சாதகமாக அமையும்.