தமிழகம்

மதுரை அருகே 2000 வருட பழமையான தாழிப்பானை கண்டுபிடிப்பு

கி.மகாராஜன்

மதுரை: மதுரை அருகே 2000 வருட பழமையான தாழிப்பானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சங்க காலத்திற்கு முன்பு அதாவது கிபி 2000 வருடத்திற்கு முன்பாக தமிழகத்தில் இறந்தவர்களை மண் பானையில் வைத்து புதைக்கும் வழக்கம் இருந்துள்ளது. 

இதில் முழு உடலையும் உள்ளே வைத்து புதைப்பார்கள்.  மண்பானையில் முழு உடலையும் வைத்து புதைப்பார்கள் அல்லது இறந்தவர்களின் எலும்புகளை சேகரித்து அதனை பானையில் வைத்தும் புதைப்பார்கள் அல்லது இறந்தவர்கள் பயன்படுத்திய பொருட்களை மட்டும் தாழிப் பானையில் வைத்து புதைக்கும் வழக்கம் இருந்துள்ளது. இந்த மண்பானை கருப்பு சிகப்பு நிறத்தில் இருக்கும்.

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பாப்பி நாயக்கன்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியில் இருக்கும் சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் தாழிப்பானை மூன்று சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த கரடு அருகே இருக்கும் பாப்பி நாயக்கன்பட்டி கண்மாயிலும் மண்ணில் புதைந்த நிலையில் தாழி பானை ஒன்று இருக்கிறது. கரடில் இருக்கும் தாழிப் பானையின் உள்ளே எலும்பு துண்டுகளும் காணப்படுகிறது.

இப்பகுதி முழுவதும் கருப்பு சிவப்பினால் ஆன பானை ஓடுகள் விரவிக்  கிடக்கின்றன. இது ஒரு ஈமக்காடுபோல் காட்சியளிக்கிறது.

மதுரை இயற்கை பண்பாடு அறக்கட்டளை குழுவினர்கள் இப்பகுதியை மேற்பரப்பு கள ஆய்வு செய்தனர். இதில் சிற்பத்துறை ஆய்வாளர் தேவி அறிவு செல்வம், வரலாற்று ஆர்வலர்கள் வினோத், விஜய்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT