திருப்பரங்குன்றம் மலை
மதுரை: நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், திருப்பரங்குன்றம் தீபத்தூணை தமிழக தொல்லியல் அதிகாரிகள் ஆய்வு செய்ததில் சந்தேகம் இருப்பதாக மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சோலைகண்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம் உயர் நீதிமன்ற அமர்வில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு டிச.12-ல் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், திருப்பங்குன்றம் மலை உச்சியில் இருப்பது எல்லைக் கல்லா? தீபத்தூணா? என ஆய்வு செய்ய தமிழ்நாடு தொல்லியல் துறை அதிகாரிகள் திருப்பரங்குன்றம் மலையில் இன்று ஆய்வு செய்துள்ளனர். இந்துக்கள் புனிதமாக கருதும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணுக்கு அதிகாரிகள் செருப்பு அணிந்த காலுடன் சென்றுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூண் இருந்ததற்கான பல்வேறு ஆதாரங்கள், ஆவணங்கள் உள்ளன. இவற்றின் அடிப்படையில்தான் தீபத்தூணியில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டது.
திமுக அரசு நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றாமல், அங்கிருப்பது தீபத்தூண் அல்ல, எல்லைக் கல்தான் என அறிவிக்க சதி வேலையில் ஈடுபட்டு அதற்காக தொல்லியல் துறை அதிகாரிகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளது. இந்த ஆய்வில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன.
இந்த ஆய்வுக்கு உயர் நீதிமன்றத்தில் தொல்லியல் துறை அதிகாரிகள் அனுமதி பெற்றுள்ளார்களா? தீர்ப்புக்கு முன்பு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீபத்தூணை நேரில் ஆய்வு செய்துள்ளார். அதன் பிறகு தொல்லியல் அதிகாரிகள் ஏன் ஆய்வு செய்ய வேண்டும்.
தமிழக தொல்லியல் துறையின் செயல்பாடு நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். இதனால் தொல்லியல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.